சென்னை: அண்மையில் சென்னை கடற்கரைப் பகுதிகளில் ஏராளமான ஆமைகள் இறந்த நிலையில் கரை ஒதுங்கியது குறித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் விசாரணை மேற்கொண்டுள்ளது.
நூற்றுக்கணக்கான ஆமைகள் இவ்வாறு இறந்து கரை ஒதுங்க என்ன காரணம் என்று கேள்வி எழுப்பியுள்ள அத்தீர்ப்பாயம், இவ்வாறு மீண்டும் நிகழாமல் இருக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
கடந்த வாரம், சென்னையில் திருவொற்றியூர் முதல் நீலாங்கரை வரையில் உள்ள கடற்பகுதிகளில் ஏராளமான ஆமைகள் இறந்து கரை ஒதுங்கின. பின்னர், கோவளம் கடற்பகுதியிலும் சில ஆமைகள் இறந்து கரை ஒதுங்கின.
ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட ஆமைகள் கரை ஒதுங்கியதால், பரபரப்பும் குழப்பமும் ஏற்பட்டது. இந்திய வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், அழிவின் விளிம்பில் உள்ள உயிரினங்கள் பட்டியலில் கடல் ஆமை இடம்பெற்றுள்ளது.
இவற்றின் இறப்புக்கான உண்மையான காரணம் குறித்து இதுவரை அதிகாரபூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை.
இந்நிலையில், ஊடகங்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் இதுகுறித்து தானாக வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளது.
முதற்கட்ட விசாரணையின் முடிவில், அனுமதிக்கப்படாத இடத்தில் விசைப்படகுகளில் மீன் பிடிக்கப்படுகிறது என்றும் கடல் ஆமைகளைப் பாதுகாக்கும் வசதி கொண்ட வலைகளைப் பயன்படுத்துவதில்லை என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
ஆமைகள் இறப்புக்கு என்ன காரணம், யார் பொறுப்பு என்பது குறித்து தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.