சென்னை: சென்னையில் பணிபுரியும் ஆயிரக்கணக்கானோர், பொங்கல் கொண்டாட்டத்திற்காக தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ளனர். அதனால், சென்னையில் பல பகுதிகளில் கடைகள் மூடிக் கிடக்கின்றன. அவ்வாறு சொந்த ஊர்களுக்குச் சென்றவர்கள், விடுமுறை முடிந்து திரும்பி வருவதற்கு வசதியாக 5,192 பேருந்துகளை இயக்கப்போவதாக தமிழ் நாடு அரசு போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
சென்னைக்கு வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 1,415 பேருந்துகளும், சென்னையைத் தவிர மற்ற நகரங்களுக்கு 2,060 பேருந்துகளும் இயக்கப்பட்டன.
சென்னைக்கு வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 3,100 பேருந்துகள் என மொத்தம் 5,192 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. அதேபோல சென்னையைத் தவிர மற்ற நகரங்களுக்கு 4,080 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் இருந்து சுமார் 19 லட்சம் பேர் தங்கள் சொந்த ஊர்களுக்குப் பயணம் செய்துள்ளதாகத் தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.
விடுமுறை முடிந்ததைத் தொடர்ந்து சொந்த ஊருக்கு சென்றவர்கள் அரசுப் பேருந்து, தனியார் பேருந்து, கார், வேன் போன்ற பல்வேறு வாகனங்களிலும் ரயில்களிலும் சென்னைக்குத் திரும்பி வருகின்றனர்.
சனிக்கிழமை ஒரே நாளில் சென்னைக்கு ஏராளமான வாகனங்கள் படையெடுத்து வந்ததால், சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக தமிழக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்களால் எழும்பூர், தாம்பரம் ரயில் நிலையங்களிலும் கூட்டம் அதிகரித்துள்ளது.

