விக்கிரவாண்டி: விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த முட்டத்துார் கிராமத்தில் பழமையான பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
வரலாற்று ஆய்வாளர் செங்குட்டுவன் தலைமையில் நடைபெற்ற ஆய்வின்போது, பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டதாக தினமலர் ஊடகத் தகவல் தெரிவித்தது.
பானை ஓடுகள் குறித்து தமக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும், உடனடியாக தாம் அங்கு சென்றதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்போது, பழமையான கற்கோடரி கண்டெடுக்கப்பட்டது.
இக்கருவி 5,000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்றும் வேட்டைக் கால மக்கள் வேளாண் சமூகத்துக்கு மாறியபோது இதுபோன்ற கற்கோடரிகளை பயன்படுத்தி உள்ளனர் என்றும் செங்குட்டுவன் தெரிவித்துள்ளார்.
“விழுப்புரம் மாவட்டத்தில் கீழ்வாலை, உடையாநத்தம், தி.தேவனுார், பாக்கம் மலைப்பகுதிகளில் கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் ஏற்கெனவே கண்டறியப்பட்ட நிலையில், மேலும் ஒரு தடயம் கிடைத்துள்ளது,” என்றார் செங்குட்டுவன்.

