கிண்டி மருத்துவமனையில் 18 மாதங்களில் 5,020 அறுவை சிகிச்சைகள்: அமைச்சர் பாராட்டு

கிண்டி மருத்துவமனையில் 18 மாதங்களில் 5,020 அறுவை சிகிச்சைகள்: அமைச்சர் பாராட்டு

படம்: தமிழக ஊடகம்

12 Dec 2024 - 9:26 pm

1 mins read

சென்னை: சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையில் 18 மாதங்களில் பல்லாயிரம் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுவதற்குக் காரணமாக இருந்த மருத்துவர்கள், தாதியர், மருத்துவம் சார்ந்த களப்பணியாளர்களுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கடந்தாண்டு, சென்னை, கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனை தமிழக முதல்வரால் திறந்து வைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டது.

இம்மருத்துவமனை தொடங்கப்பட்ட குறுகிய காலத்தில் (18 மாதங்கள்) 5,020 அறுவை சிகிச்சைகளும், 538 நரம்பியல் அறுவை சிகிச்சைகள், 1375 சிறுநீரக அறுவை சிகிச்சைகள், 512 பொது அறுவை சிகிச்சைகள், 1000-க்கும் மேற்பட்ட புற்றுநோய் அறுவை சிகிச்சைகள் மற்றும் 137 இதய பைபாஸ் மற்றும் இதய வால்வு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும் 10 மாதங்களில் இதயவியல் துறையில் 1,683 பேருக்கு ‘ஆஞ்சியோகிராம்’, ‘ஸ்டென்ட்’ மற்றும் ‘பேஸ்மேக்கர்’ பொருத்தும் சிகிச்சைகள் நடைபெற்று சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வியாழக்கிழமை (டிசம்பர் 12) மருத்துவமனைக்கு வந்து, சிகிச்சை பெற்று வருபவர்களைச் சந்தித்து நலம் விசாரித்தார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்
அறுவை சிகிச்சைமருத்துவம்புற்றுநோய்