தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

537 தமிழக மீனவர்கள் கைது; 70 மீன்பிடி படகுகள் பறிமுதல்

2 mins read
96233be5-23a9-4c1b-8e5c-0138b0a40c00
சனிக்கிழமை எட்டு மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். இரண்டு படகுகள் பறிமுதல் செய்யப்பட்டன. - படம்: தமிழக ஊடகம்

மண்டபம்: இலங்கையின் நெடுந்தீவுக்கு அருகே தமிழகத்தைச் சேர்ந்த எட்டு மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அனைத்துலகக் கடல் எல்லையைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி, இலங்கைக் கடற்படையினர் அந்த எட்டுப் பேரையும் பிடித்துச் சென்றனர். இச்சம்பவம் சனிக்கிழமை (டிசம்பர் 7) நிகழ்ந்தது.

ராமநாதபுரம் மாவட்டத்தின் மண்டபம் பகுதியிலிருந்து இயந்திரப் படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குள் சென்றனர். அவர்களில் சிலர் இலங்கையின் கடல் பரப்புக்குள் சென்று மீன் பிடித்ததாகக் கூறப்படுகிறது.

அதனைக் கண்காணித்த இலங்கைக் கடற்படையினர், நெடுந்தீவு அருகே மீன்பிடித்த இரண்டு இயந்திரப் படகுகளைப் பறிமுதல் செய்து அந்தப் படகுகளில் இருந்த எட்டு மீனவர்களைக் கைது செய்தனர்.

படகுகளுடன் அவர்கள் அனைவரும் கங்கேசன்துறை துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு யாழ்ப்பாணத்தில் உள்ள மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் மண்டபம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் ராஜா மற்றும் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த சகாய ஆண்ட்ரூ ஆகியோருக்குச் சொந்தமானவை எனத் தெரிய வந்தது.

இலங்கைக் கடற்படையிடம் பிடிபட்ட மீனவர்கள் எட்டுப் பேரும் 45 வயதுக்கும் 60 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.

மண்டபம் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த அவர்களின் விவரங்கள் அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

ஏற்கெனவே கடந்த புதன்கிழமை (டிசம்பர் 4) ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேர் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மீண்டும் அதேபோன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இந்த ஆண்டில் மட்டும் 537 இந்திய மீனவர்கள் இலங்கைப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், 70க்கும் மேற்பட்ட மீன்பிடி படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

குறிப்புச் சொற்கள்