தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சென்னைக்கு கடத்திவரப்பட்ட 5,400 நீர் ஆமைகள் பறிமுதல்

1 mins read
a97a9893-d6f1-4e62-9be5-60550074dc02
கடத்தி வரப்பட்ட சிவப்புக் காது அலங்கார நீர் ஆமைகள். - படம்: ஊடகம்

சென்னை: சென்னையைச் சேர்ந்த இரு பயணிகளிடம் இருந்து 5,400 சிவப்புக் காது அலங்கார நீர் ஆமைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சென்னைக்கு புதன்கிழமை காலை (டிசம்பர் 4) பயணிகள் விமானம் வந்தது. பயணிகளின் உடமைகளைச் சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது சென்னையைச் சேர்ந்த பயணிகள் இருவரிடம் நடத்திய சோதனையில், அவர்கள் கொண்டு வந்த பெரிய அட்டைப் பெட்டியில் இருந்த 5,400 சிவப்புக் காது அலங்கார நீர் ஆமைகளைப் பறிமுதல் செய்தனர். இதன் அனைத்துலக மதிப்பு சுமார் ரூ.75 லட்சம் என்று கூறப்படுகிறது.

ஆமைக் கடத்தலில் ஈடுபட்ட இரு பயணிகளைக் கைது செய்த அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். காவலர்களின் முதற்கட்ட தகவலின்படி, சென்னையைச் சேர்ந்த ரமேஷ் ஆகாஷ், தமிம் அன்சாரி முகமது ரபிக் ஆகிய இருவரும் சுற்றுலாப் பயணிகளாக மலேசியா சென்று விட்டு திரும்பியது தெரியவந்தது.

அத்துடன் கடத்தி வரப்பட்ட நீர் ஆமைகளை மீண்டும் மலேசியாவுக்குத் திருப்பி அனுப்ப சுங்கத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

மேலும், அதற்கான செலவுகள் அனைத்தையும் கடத்திக்கொண்டு வந்த பயணியிடமே வசூலிக்க அதிகாரிகள் முடிவு செய்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த வகை சிவப்புக் காது நீர் ஆமைகள் தாய்லாந்து, மலேசியா, ஐரோப்பிய நாடுகளில் அதிகம் காணப்படுகின்றன.

இவற்றைப் பெரிய பங்களாக்களில் அலங்காரத் தொட்டிகளில் வைத்து வளர்த்து வருகின்றனர். மேலும் மருந்துகள் தயாரிப்பதற்கும் பயன்படுத்தப்படுகின்றன.

குறிப்புச் சொற்கள்