கோவை விமான நிலையத்தில் 6.7 கிலோ உயர்ரக கஞ்சா பறிமுதல்: இருவர் கைது

கோவை விமான நிலையத்தில் 6.7 கிலோ உயர்ரக கஞ்சா பறிமுதல்: இருவர் கைது

2 mins read
e46b2fb1-6aa0-4916-bfdf-0d4eb5cc7272
கோவை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட உயர்ரக கஞ்சா பொட்டலங்கள். - படம்: ஊடகம்

கோவை: வான் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது, இரு விமானப் பயணிகளிடம் இருந்து ஏழு கோடி ரூபாய் மதிப்புள்ள உயர்ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், வேறு இரு பயணிகளிடம் இருந்து ரூ.18 லட்சம் மதிப்புள்ள மின்னணுப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதனால் கோவை விமான நிலையத்தில் பரபரப்பு நிலவியது.

திங்கட்கிழமை (ஆகஸ்ட் 11) இரவு சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்து சேர்ந்த விமானத்தில் பயணம் மேற்கொண்ட 200க்கும் மேற்பட்ட பயணிகளிடம் விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள், வான் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் வழக்கமான சோதனை மேற்கொண்டனர்.

பயணிகளின் உடைமைகளைச் சோதனையிட்டபோது, இருவர் மீது அதிகாரிகளுக்குச் சந்தேகம் ஏற்பட்டது. எனவே, இருவரையும் தனியே அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

தனித்தனி அறைகளில் இருவரிடமும் சோதனை நடத்தியபோது அவர்கள் கொண்டுவந்த இரு பைகளில் 6.7 கிலோ உயர்ரக கஞ்சா இருப்பது தெரிய வந்தது. தண்ணீரில் வளரக்கூடிய இந்த வகை கஞ்சா, அண்மைக் காலமாக இந்தியாவுக்குள் அதிக அளவில் கடத்தி வரப்படுகிறது. கடந்த மாதம் மும்பையில் 25 கோடி ரூபாய் மதிப்புள்ள கஞ்சாவும் புனேயில் கடந்த வாரம் ரூ.6 கோடி மதிப்புள்ள உயர்ரக கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டன.

கோவையில் பிடிபட்ட உயர்ரக கஞ்சாவின் அனைத்துலகச் சந்தை மதிப்பு ரூ.7 கோடி. அதைக் கடந்தி வந்த இருவரும், கேரள மாநிலம் கோட்டையம் பகுதியைச் சேர்ந்தவர்கள். நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், இருவரையும் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டது.

இதற்கிடையே, அதே விமானத்தில் பயணம் செய்த புதுக்கோட்டையைச் சேர்ந்த தமிழரசி ஜெயமாணிக்கம், பாண்டித்துரை சுப்பையா ஆகிய இருவரும் ரூ.18.67 லட்சம் மதிப்பிலான மின்னணுப் பொருள்களைக் கடத்தி வந்ததும் அம்பலமானது. சுங்க வரி செலுத்தாமல், அவற்றை இருவரும் ரகசியமாகக் கடத்தி வந்ததை அடுத்து, தீவிர விசாரணை நடந்துவருகிறது.

குறிப்புச் சொற்கள்