காரைக்குடி: வீட்டில் இருந்த பெண் ஒருவரின் முகத்தில் மிளகாய்ப் பொடியைத் தூவிவிட்டு 6 பவுன் தங்கச் சங்கிலியை இரண்டு பெண்கள் பறித்துச் சென்றனர்.
அந்தத் துணிகரச் சம்பவம் காரைக்குடியில் சனிக்கிழமை (மே 10) இரவு நடைபெற்றது.
காரைக்குடி சந்தைப்பேட்டையில் சித்ரா, 53, என்பவர் வசித்து வருகிறார். இவர் இரவு நேரம் வீட்டில் இருந்தபொழுது அவரது மருமகள் மகேஸ்வரி இருக்கிறாரா என்று கேட்டுக்கொண்டே வீட்டுக்குள் இரண்டு பெண்கள் வந்தனர்.
உள்ளே நுழைந்ததும் அங்கிருந்த சித்ராவின் முகத்தில் மிளகாய்ப் பொடியைத் தூவி, அவர் கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு இருவரும் தப்பி ஓடினர்.
இது குறித்து காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது.
காரைக்குடி டிஎஸ்பி பார்த்திபன் நேரில் சென்று சம்பவ இடத்தைப் பார்வையிட்டார்.
அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆராய்ந்து, மிளகாய்ப் பொடி தூவிவிட்டு தங்கச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு தப்பியோடிய இரண்டு பெண்களையும் காவல்துறையினர் வலைவீசித் தேடி வருகின்றனர்.

