சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த செயல்திட்டக் குழு ஆலோசனைக் கூட்டத்தில் ஆறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
வருகிற 2026ம் ஆண்டு சட்டசபைத் தேர்தல் தமிழகத்தில் நடைபெற உள்ளது. இதற்கு இன்னும் காலம் இருக்கிறது என்றாலும், அதற்கான திட்டப்பணிகள் தமிழக அரசியல் கட்சிகளிடம் ஆரம்பமாகி வருகின்றன.
அந்தவகையில், திமுகவும் இப்போதிருந்தே தன்னுடைய பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. அதன் தொடர்பாக அக்கட்சியின் உயர்நிலை செயல்திட்டக் குழுக் கூட்டம் நேற்று காலையில் நடைபெற்றது.
கூட்டம் தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருந்தார். அதில், “மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக உயர்நிலை செயல் திட்டக் குழுக் கூட்டம் 20.11.2024 புதன்கிழமை காலை 10.30 மணி அளவில், சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில் நடைபெறும். அப்போது உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்,” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி நேற்றைய தினம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக்குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள், உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இந்த திமுக உயர் நிலை செயல்திட்டக் குழு கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றில் முக்கியமாக ஆறு தீர்மானங்கள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.
முதலாவது தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளைப் புறந்தள்ளி இந்திக்கு விழா எடுப்பது, சிறுபான்மையினர் உரிமைகளைப் பறிக்கும் சட்டங்கள் கொண்டு வருவது, தொடர் ரயில் விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்காதது மாநில அரசுக்கான நிதியை விடுவிக்காதது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் மத்திய பாஜக அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
இரண்டாவது கடந்த 18 மாதங்களாக மணிப்பூர் மாநிலம் பற்றி எரியும் நிலையில், பிரதமர் மோடி அமைதி காப்பது அம்மாநிலத்தை மத்திய அரசு கைவிட்டதாகவே தெரிகிறது. இவ்விவகாரத்தில் பிரதமர் மோடி தனிக்கவனம் செலுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
மூன்றாவது 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராகும் வகையில் பிரசாரத்தை இப்போதே தொடங்க நிர்வாகிகள், தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. துண்டு பிரசுரங்கள், திண்ணைப் பிரசாரங்கள் என மக்கள் இயக்கத்தை தொடங்க வேண்டும்.
நான்காவதாக திமுக அரசின் திட்டங்களால் பயனடைந்தவர்கள் 2026ல் திமுக ஆட்சியை மீண்டும் மலரச் செய்யவேண்டும்.
ஐந்தாவது இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள், படகுகளை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆறாவது மத்திய வருவாயில் மாநில அரசுக்கு 50 விழுக்காட்டு நிதிப் பகிர்வை அளிக்க வேண்டும். மத்திய - மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்தும் திட்டங்களுக்கு 50 விழுக்காட்டு நிதியை ஒதுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.