சென்னை: தமிழக முதல்வரின் ஒருங்கிணைந்த நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் 628 திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சாலைகள், பூங்காக்கள், பள்ளிக் கட்டடங்கள், மூன்று குடிநீர்த் திட்டங்கள் அவற்றில் அடங்கும். நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப்சிங் பேடி வெள்ளிக்கிழமை இது தொடர்பாக ஆறு அரசாணைகளைப் பிறப்பித்தார்.
நவம்பர் 10ஆம் தேதி நடைபெற்ற பொதுத்திட்ட ஒப்புதல், கண்காணிப்புக் குழுவின் மூன்றாவது மற்றும் நான்காவது கூட்டங்களில் இவை ஏற்கப்பட்டன. பேரூராட்சிகளுக்கு 374 திட்டங்களும் நகராட்சிகளுக்கு 237 திட்டங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.
தேனி மாவட்டம் வீரபாண்டி பகுதியில் ரூ.29.76 கோடி திட்டம், கானத்தில் ரூ.7.33 கோடி திட்டம், தூத்துக்குடியின் ஆறுமுகநேரியில் ரூ.47.96 கோடி திட்டம் இடம்பெற்றுள்ளன. திருவண்ணாமலையின் வெட்டவலத்தில் பேருந்து நிலையமும் இதில் அடங்கும்.
நகராட்சிகளில் சிமெண்ட் கான்கிரீட் சாலைப் புதுப்பிப்புகள், 48 பூங்காக்கள், இரண்டு விளையாட்டு அரங்குகள் உள்ளன. தூத்துக்குடியில் மட்டும் 32 சாலைப் புதுப்பிப்புப் பணிகள் நடைபெற உள்ளன.
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு 17 திட்டங்கள் கிடைத்துள்ளன. பெருங்குடி, சோழிங்கநல்லூர் மண்டலங்களில் ஒன்பது பிட்டுமினஸ் சாலைகளும் சோழிங்கநல்லூர் மண்டலத்தில் நான்கு சிமென்ட் கான்கிரீட் சாலைகளும் அடங்கும்.
சென்னையில் நான்கு பள்ளிகளும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. நடப்பு ஆண்டில் ஒதுக்கப்பட்ட ரூ.300 கோடி பங்கு கிட்டத்தட்ட தீர்ந்துவிட்ட நிலையில், 122 திட்டங்களின் நிதி அமைப்பு மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
கொடுங்கையூரில் உள்ள ஒருங்கிணைந்த கழிவுச் செயலாக்க வசதியும் மாற்றியமைக்கப்பட்ட நிதி அமைப்பில் உள்ளது.
ஐந்து ஆண்டுகளில் ரூ.1.5 லட்சம் கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் இத்திட்டங்களுக்கான செலவில் 10 விழுக்காட்டை உள்ளாட்சி அமைப்புகள் ஏற்கும்.
திட்டங்கள் முறையாகச் செயல்படுத்தப்பட்ட பின்னர் நகர்ப்புறப் பகுதிகள் மேம்பாடு கண்டு எதிர்பார்க்கப்படும் வளர்ச்சி இலக்குகளை எட்டும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
