நான்கு ஆண்டுகளில் 6,597 கொலைகள்: அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு

2 mins read
0b0c4b83-b9d2-47fb-a39c-82634b766f30
சட்டம், ஒழுங்கைப் பாதுகாக்க முடியாமல் தமிழக அரசு உறங்கிக்கொண்டிருப்பதாகக் குற்றம் சாட்டும் பாமக தலைவர் அன்புமணி. - படம்: இந்திய ஊடகம்

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் 6,597 படுகொலைச் சம்பவங்கள் அரங்கேறியுள்ளதாகப் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

மதுரையில் சனிக்கிழமை (மார்ச் 22) இரவு காளீஸ்வரன் என்ற ஆடவர் அவரது வீட்டிற்கு வெளியிலேயே வெட்டிக்கொல்லப்பட்டார். மூன்று மோட்டார்சைக்கிள்களில் வந்த கும்பல் அவரைக் கொன்றுவிட்டுத் தப்பியோடியது.

கொல்லப்பட்ட காளீஸ்வரன், மதுரை மாநகரத் திமுக நிர்வாகி வி.கே. குருசாமியின் உறவினர் எனச் சொல்லப்படுகிறது. அவர்மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல வழக்குகளும் உள்ளன.

இக்குற்றச் செயலைக் கண்டித்துள்ள அன்புமணி, அதுகுறித்து தமது எக்ஸ் ஊடகப் பக்கம் வழியாக ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அதில், “மதுரை தனக்கன்குளத்தைச் சேர்ந்த காளீஸ்வரன் என்ற குண்டர் நள்ளிரவில் தமது வீட்டிற்கு வெளியிலேயே கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். காளீஸ்வரனுக்கும் அவரது எதிர்க்குழுவினருக்கும் இடையே தொடர்ந்து வரும் மோதலில் இதுவரை பதினைந்துக்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அதன் தொடர்ச்சியாகவே இந்தப் படுகொலையும் நிகழ்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. காளீஸ்வரனின் எதிரிகள் சிறையில் இருந்தபடியே சதித்திட்டம் தீட்டி இந்தக் கொலையை நடத்தியிருப்பதாகவும் தெரிகிறது,” என்று அன்புமணி பதிவிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் கொலைகள் நடக்கும்போதெல்லாம் அவை தனிப்பட்ட காரணங்களுக்காக நடத்தப்பட்டது என்றும், கொலையாளிகளை விரைவாக கைதுசெய்துவிட்டோம் என்றும் கூறி, சிக்கலைத் திசைதிருப்புவதையே திமுக அரசு வாடிக்கையாகக் கொண்டிருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் திட்டமிட்ட படுகொலைகள் நடக்காத நாளே இல்லை என்று கூறும் அளவிற்கு நிலைமை மோசமடைந்து வரும் நிலையில், அதனைத் தடுக்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டிக்கத்தக்கது என்றும் அன்புமணி சாடியுள்ளார்.

தமிழ்நாட்டில் நாளொன்றுக்குச் சராசரியாக 4.52 படுகொலைகள் என்ற கணக்கில், திமுக ஆட்சிக்கு வந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் 6,597 படுகொலைகள் அரங்கேறியுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மாநிலத்தில் சட்டம், ஒழுங்கைப் பாதுகாக்க முடியாமல் தமிழக அரசு உறங்கிக்கொண்டிருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ள அன்புமணி, இனியாவது அரசு தனது உறக்கத்தைக் கலைத்து, சட்டம், ஒழுங்கைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இருக்கிறார்.

இதனிடையே, காளீஸ்வரன் வழக்குத் தொடர்பில் மதுரை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இரண்டு தனிப்படைகள் அமைத்து, குற்றவாளிகளைத் தேடும் பணியில் மதுரை மாநகரக் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்