சென்னை: மக்கள்தொகை தொடர்ந்து அதிகரித்து வருவதால், சென்னை மாநகரின் குடிநீர்த் தேவையும் அதிகரித்துள்ளது.
இதையடுத்து, சென்னைக்காக புதிய நீர்த்தேக்கம் ஒன்றை அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
கோவளம் அருகே 4,375 ஏக்கர் பரப்பளவில், 1.6 டிஎம்சி கொள்ளளவில் இந்தப் புதிய நீர்த்தேக்கம் அமைக்கப்படும். இதற்காக சுற்றுச்சூழல் அனுமதியை தமிழக நீர்வளத் துறை கோரியுள்ளது. இந்தத் திட்டத்தின் மொத்த மதிப்பீடு ரூ.471 கோடி என்றும் மழை வெள்ள நீரைச் சேமித்து சென்னையில் குடிநீர்த் தேவையை ஈடுகட்டும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் நாள்தோறும் பல நூறு மில்லியன் லிட்டர் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையங்கள், ஏரி நீர் எனப் பல நீர் ஆதாரங்கள் மூலம் சென்னை நகர மக்களின் குடிநீர்த்தேவை நிறைவேற்றப்படுகிறது.
இந்நிலையில், சென்னை மாநகரின் தண்ணீர்த் தேவை, எதிர்வரும் 2035ம் ஆண்டு மேலும் அதிகரிக்கும் என்பதால் அன்றைய தேவையைச் சமாளிக்கும் வகையில் புதிய நீர்த்தேக்கம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.