திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பூ வியாபாரி ஒருவரது வீட்டுக்கு ரூ.7 லட்சத்து 46 ஆயிரத்து ஒரு ரூபாயை மின்கட்டணமாகச் செலுத்தும்படியும் இல்லையேல் இணைப்பு துண்டிக்கப்படும் என்றும் கைப்பேசியில் குறுஞ்செய்தி வந்துள்ளது.
இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த பூ வியாபாரி இதுகுறித்து மின்வாரிய அலுவலகத்தில் கேட்டபோது, அந்தக் குறுஞ்செய்தி தவறுதலாக அனுப்பப்பட்டு விட்டதாகவும் அந்தக் கட்டணத்தைச் செலுத்தத் தேவையில்லை என்றும் கூறப்பட்டதாகத் தெரிகிறது.
திண்டுக்கல், நிலக்கோட்டை அருகே உள்ள லட்சுமிபுரம் பகுதியைச் சேர்ந்த பூ வியாபாரியான முருகேசன் தற்போது பட்டிவீரன்பட்டியில் வசித்து வருகிறார்.
இவரது சொந்த வீடு, நிலக்கோட்டை அருகே குல்லிசெட்டிப்பட்டியில் உள்ளது. அந்த வீடு கடந்த கடந்த இரு ஆண்டுகளாக யாரும் குடியிருக்காத நிலையில் பூட்டப்பட்டு கிடந்து வருகிறது.
எனினும் அவ்வீட்டை, முருகேசனின் உறவினர் ஒருவர் பராமரித்து வருகிறார்.
இவ்வீட்டுக்கு இரு மாதத்துக்கு ஒருமுறை ரூ.120 முதல் ரூ.150 வரை மின்கட்டணம் செலுத்தி வந்த நிலையில், கடந்த 28ஆம் தேதி முருகேசனின் கைப்பேசிக்கு பிப்ரவரி 17ஆம் தேதிக்குள் ரூ.746,001 மின்கட்டணத்தைச் செலுத்தும்படி குறுஞ்செய்தி வந்ததால் முருகேசன் அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து, “தவறுக்கு வருந்துகிறோம், அந்தக் கட்டணத்தைச் செலுத்தத் தேவையில்லை,” என்று மின் வாரிய அலுவலகம் தெரிவித்துள்ளது.