அபுதாபி கப்பலில் 11 மாதங்கள் தவிப்பு; ஏழு மாலுமிகள் இந்தியா திரும்பினர்

அபுதாபி கப்பலில் 11 மாதங்கள் தவிப்பு; ஏழு மாலுமிகள் இந்தியா திரும்பினர்

2 mins read
4d315f16-73de-4395-b9f2-0cc16a8b5bf1
அபுதாபியில்  ‘எம்வி சீ ஸ்டார் 2’ கப்பலில் சிக்கித் தவித்த ஏழு இந்திய மாலுமிகள் பாதுகாப்பாகத் தாய்நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக ஐக்கிய அரபுச் சிற்றரசுகளில் உள்ள இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது. - படம்: X/FSUIINDIA
Google News Preferred Icon

புதுடெல்லி: அபுதாபியின் மினா சயீத் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ‘எம்வி சீ ஸ்டார் 2’ என்ற எண்ணெய் விநியோகக் கப்பலில் கடந்த 11 மாதங்களாகத் தவித்து வந்த ஏழு இந்திய மாலுமிகள் பாதுகாப்பாகத் தாயகம் திரும்பியுள்ளனர்.

எஞ்சியுள்ள மாலுமிகளையும் விரைவாகத் தாய்நாட்டிற்கு அழைத்து வர தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கப்பலில் உள்ள எஞ்சிய ஊழியர்களுக்குக் கடந்த ஐந்து மாதங்களாகச் சம்பளம் வழங்கப்படவில்லை என்று இந்தியக் கடல்சார் தொழிலாளர் சங்கம் கவலை தெரிவித்துள்ளது.

மேலும், கப்பலின் உரிமையாளர் முந்தைய சம்பளத்திலிருந்து விசா, பயணச் செலவுகளைப் பிடித்தம் செய்துள்ளதாகவும் அவர்களின் முக்கியப் பயண ஆவணங்கள் துறைமுக அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

மாலுமிகளுக்கு நிலுவையில் உள்ள சம்பளத்தை உடனடியாக வழங்கவும் அவர்களை விரைவாகத் தாயகம் அனுப்பவும் நடவடிக்கை எடுக்குமாறு இந்திய வெளியுறவு அமைச்சு, கப்பல் போக்குவரத்துத் தலைமை இயக்ககம், துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சு, அனைத்துலகப் போக்குவரத்துத் தொழிலாளர் கூட்டமைப்பு ஆகியவற்றிடம் இந்தியக் கடல்சார் தொழிலாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஈரான் மோதலால் பாதிக்கப்பட்ட நீரிணைகளில் இயங்கும் இந்திய மாலுமிகளின் பாதுகாப்புக்கும் நலனுக்கும் முன்னுரிமை அளிக்கப்படுவதாக இந்திய வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.

ஹோர்முஸ் நீரிணையில் இந்திய மாலுமிகள் பயணம் செய்த கப்பல்மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, ஆபத்தான கடல்சார் மண்டலங்களில் இயங்கும் மாலுமிகளுக்கு நேரடி கடற்படைப் பாதுகாப்பும் கூடுதல் உடற்பாதுகாப்பும் வழங்கப்பட வேண்டும் என தொழிலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

குறிப்புச் சொற்கள்