அடுத்த 5 ஆண்டுகளில் 7 லட்சம் கனவு இல்லங்கள்: ஸ்டாலின்

அடுத்த 5 ஆண்டுகளில் 7 லட்சம் கனவு இல்லங்கள்: ஸ்டாலின்

2 mins read
b59e0251-d0f0-4e60-a3aa-33b790663d7b
முதல்வர் ஸ்டாலின். - படம்: இந்து தமிழ் திசை

சென்னை: ‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டத்தின்கீழ் தமிழகம் முழுவதும் நகரங்கள், கிராமங்களில் 2030க்குள் ஏழு லட்சம் வீடுகள் கட்டப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

வெள்ளிக்கிழமை (மார்ச் 6) சென்னை வர்த்தக மையத்தில், ‘உங்கள் கனவை சொல்லுங்க’ திட்டத்தின் நிறைவாக ‘கனவுகள் மெய்ப்படும்’ என்ற தலைப்பில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், அடுத்த ஐந்து ஆண்டுகளில் தமிழகத்தின் வளர்ச்சிக்கான செயல்திட்டம் குறித்து விரிவாக விளக்கம் அளித்தார்.

பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஆளுமைகளுடன் கலந்துரையாடிய முதல்வர் ஸ்டாலின், ‘தமிழ்நாடு-2030’ பெருங்கனவைப் பறைசாற்றும் திட்டம் குறித்து விவரித்தார்.

‘உங்க கனவை சொல்லுங்க’ திட்டத்தின்கீழ் 1.80 லட்சம் குடும்பங்களிடம் அவர்களுடைய கனவு குறித்து கேட்டறியப்பட்டு 14 முக்கியத் திட்டங்கள் அறிவிக்கப்படும் என்றார் அவர்.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் ‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டத்தின்கீழ், கிராமங்களில் ஐந்து லட்சம் வீடுகளும் நகர்ப்புறங்களில் இரண்டு லட்சம் வீடுகளும் கட்டப்படும் என்று குறிப்பிட்ட திரு ஸ்டாலின், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், புற்று நோய் ஆகியவற்றைத் தொடக்க நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்க சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்றும் அனைத்து மாவட்டங்களிலும் மனநல ஆலோசனை மையங்கள் அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

மாநிலம் முழுவதும் 300 நூல்கள் நவீனமயமாக்கப்படும் என்று தெரிவித்த அவர், ‘வெற்றிப் பள்ளிகள்’ திட்டத்தின்கீழ், ஆயிரம் மாதிரிப் பள்ளிகள் திறக்கப்படும் என்றார்.

அனைத்து அரசுப் பள்​ளி​களி​லும் ‘ஸ்மார்ட் வகுப்​பறை’ அமைக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

“எதிர்வரும் 2030ஆம் ஆண்டுக்குள் உயர் கல்வி சேர்க்கை விகிதம் 90 விழுக்காட்டை எட்டும் வகையில் கல்வி நிறுவனக் கட்டமைப்புகள் விரிவாக்கப்படும். ஒவ்வொரு கல்வி நிறுவனத்திலும் செயற்கை நுண்ணறிவுத் திறனுக்கான செயற்கை நுண்ணறிவு ஆய்வகங்கள் அமைக்கப்படும்.

“2030க்குள் கால்நடைகள் எண்ணிக்கை மூன்று கோடியாக அதிகரிக்கப்பட்டு, பால் உற்பத்தியை 4.50 கோடி லிட்டராக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

“நகரங்களில் 20 விழுக்காட்டு இடத்தில் 2030ஆம் ஆண்டுக்குள் பசுமைப் பகுதிகள், பூங்காக்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். சென்னை உட்பட அனைத்து மாநகராட்சிகளிலும் நவீன கலாசார மையங்கள் அமைக்கப்படும்.

“அனைத்துலகச் சுற்றுலாப் பயணியரை ஈர்க்கும் வகையில் கடலோரச் சுற்றுலாப் பகுதிகளுக்குச் செல்லும் சாலைகள் மேம்படுத்தப்படும். 50 லட்​சம் இளைஞர்​களுக்கு வேலை​வாய்ப்​பு உருவாக்கப்படும்,” என்றார் முதல்வர் ஸ்டாலின்.

குறிப்புச் சொற்கள்