சென்னை: சென்னை மாதவரம் பகுதியில் சோதனைச்சாவடியில் நடத்தப்பட்ட வாகனச் சோதனையின்போது ரூ.1.4 பில்லியன் மதிப்புள்ள 70 கிலோ ஹெராயின் போதைப்பொருளை வருவாய்ப் புலனாய்வு இயக்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அதனைக் கடத்திய சந்தேகத்தின்பேரில் இருவரை அதிகாரிகள் கைதுசெய்தனர்.
மாதவரம் வழியாகச் செல்லும் வாகனம் ஒன்றில் அதிக அளவு போதைப்பொருள் கடத்தப்படுவதாக அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 17) அப்பகுதியில் திடீர்ச் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டனர்.
அப்போது, சந்தேகத்திற்கிடமான வாகனம் ஒன்று நிறுத்தப்பட்டுத் தீவிரமாகச் சோதனையிடப்பட்டது. வாகனத்தினுள் 17 பொட்டலங்களில் ஹெராயின் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரி ஒருவர் வியாழக்கிழமை தெரிவித்தார்.
அந்த ஹெராயின் பொட்டலங்கள் அனைத்தும் உறைகலனில் வைக்கப்பட்டிருந்தன.
சென்னையைச் சேர்ந்த அப்துல் ஷுக்கூர், ஷஃபீக் அகமது ஆகிய இருவரும் அந்த வாகனத்திற்குள் இருந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டனர். அடையாளம் தெரியாத சிலர் அவற்றைத் தங்களிடம் ஒப்படைத்து, வேறோர் இடத்திற்குக் கொண்டுசெல்லுமாறு சொன்னதாக அவர்கள் அதிகாரிகளிடம் கூறினர்.
அவர்கள் இருவரும் ஆலந்தூர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். அவர்களை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இச்சம்பவத்தின் பின்னணியில் அனைத்துலகப் போதைப்பொருள் கடத்தல் கும்பல் உள்ளதா என்பது குறித்தும் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
சில வாரங்களுக்குமுன், போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் அதிக அளவு மெத்தம்ஃபெட்டமைன் போதைப்பொருளைப் பறிமுதல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
