சென்னை: தேர்தல் ஆணையத்தின் ‘எஸ்ஐஆர்’ என்னும் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணி தமிழகத்தில் முழுவீச்சாக நடந்து வரும் நிலையில், அரசுப் பணியாளர்கள் 70,000 பேர் அப்பணியைப் புறக்கணித்துப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த நவம்பர் 4ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணியில் ஏறத்தாழ 71,000 பேர் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களாக (பிஎல்ஓ) நியமிக்கப்பட்டுள்ளனர். அதிக பணி நெருக்கடி காரணமாக திங்கட்கிழமை (நவம்பர் 18) முதல் எஸ்ஐஆர் பணிகளைப் புறக்கணிக்கப் போவதாக வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு முன்னதாக அறிவித்திருந்தது.
அதன்படி, அரசு ஊழியர்கள் வாக்காளர் பட்டியல் தீவிரத் திருத்தப் பணியைப் புறக்கணித்துப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தப் பணிக்காக எவ்விதப் பயிற்சியும் அளிக்கப்படவில்லை. அத்துடன் ஒழுங்கான திட்டமிடலும் இல்லை. அவசர அவசரமாகப் பணியை முடிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதால் பணியாளர்கள் அதிகமான மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர் என்று வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், வருவாய்த் துறை ஊழியர்கள் செவ்வாய்க்கிழமை பணிக்கு வந்தபோதும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை அவர்கள் முற்றிலுமாகப் புறக்கணித்தனர். இதனால், தமிழகம் முழுவதும் எஸ்ஐஆர் பணிகள் பாதிக்கப்பட்டன.
இதுகுறித்து வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்க மாநிலத் தலைவருமான எம்.பி.முருகையன் கூறும்போது, “கிராம உதவியாளர்கள், ‘விஏஓ’க்கள், வருவாய் ஆய்வாளர்கள், துணை வட்டாட்சியர்கள், வட்டாட்சியர்கள், சர்வேயர்கள், கள உதவியாளர்கள் என வருவாய்த் துறையில் மட்டும் 42 ஆயிரம் பேர் எஸ்ஐஆர் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்,” என்றார்.
தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதையொட்டி, வீடு வீடாகக் கணக்கீட்டு விண்ணப்பங்களை விநியோகித்து, அவற்றைப் பூர்த்தி செய்து திரும்பப் பெறும் பணியில் வாக்குச்சாவடி அலு[Ϟ]வலா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தமிழகத்தில் மட்டும் கிட்டத்தட்ட 6 கோடி வாக்காளர்களுக்குப் படிவங்கள் வழங்கப்பட்டிருப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

