தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பொங்கலை ஒட்டி ரூ.725 கோடிக்கு மது விற்பனை; இதுதான் திராவிட மாடல் அரசின் சாதனை: அன்புமணி

2 mins read
a9ce7912-6eef-44c7-adde-0840cf3761e9
அன்புமணி ராமதாஸ். - படம்: ஊடகம்

சென்னை: பொங்கல் திருநாளையொட்டி மூன்று நாள்களில் மட்டும் ரூ.725 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளதாக பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்து உள்ளார். 

இதன்மூலம் தமிழக மக்களை மதுப்பழக்கத்துக்கு அடிமையாக்கியதுதான் திராவிட மாடல் அரசின் சாதனை என்பது தெரிய வந்துள்ளதாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

கடந்த ஆண்டை விட 47 கோடி அதிகம்

தமிழ்நாட்டில் பொங்கல் திருநாள் சமயத்தில் கடந்த 13, 14, 16 ஆகிய தேதிகளில் டாஸ்மாக் கடைகளில் மட்டும் ரூ.725 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளது. இது கடந்த ஆண்டில் விற்பனையான ரூ.678.65 கோடியை விடவும் ரூ.47 கோடி அதிகம் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

இது நிச்சயம் நல்ல செய்தி அல்ல. கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் இன்னும் அதிக குடும்பங்கள் கண்ணீர் வடித்திருப்பதையே இந்தச் செய்தி காட்டுகிறது.

கடுமையாக அதிகரித்த மது வணிகம்

ஒரு சொட்டு மது இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் என்பதற்காகத்தான் கடந்த 45 ஆண்டுகளாகத் திரு ராமதாஸ் போராடி வருகிறார்.

ஆனால், தமிழ்நாட்டை ஆள்பவர்களோ, தமிழ்நாட்டில் ஒருவர்கூட மது அருந்தாதவர்களாக இருக்கக் கூடாது எனும் ரீதியில், அனைவரையும் மதுவுக்கு அடிமையாக்கி வருகின்றனர். அதனால்தான் கடந்த ஆண்டை விடவும் நடப்பாண்டில் மது வணிகம் கடுமையாக அதிகரித்துள்ளது.

பொங்கல் தொகுப்பில் ரூ.1,000 இல்லை

கடந்த ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1,000 வழங்கப்பட்டது. ஆனால், நடப்பாண்டில் பணம் வழங்கப்படவில்லை. ஆனாலும், மது வணிகம் ரூ.47 கோடி அதிகரித்திருப்பதன் மூலம் மது அருந்தாமல் இருக்க முடியாது என்ற நிலையில் இருப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. தமிழ்நாட்டு இளைஞர்களை நிரந்தர குடிகாரர்களாக்கியது மட்டும்தான் திராவிட மாடல் அரசின் சாதனை என்று அன்புமணி சாடினார்.

தமிழ்நாட்டில் மூலைக்கு மூலை கஞ்சாவும் மதுவும்தான் தாராளமாகக் கிடைக்கின்றன. அதனால், இந்நிலையை மாற்ற தமிழ்நாட்டில் உள்ள மதுக்கடைகளை படிப்படியாக மூடி மதுவிலக்கை ஏற்படுத்த வேண்டும். கஞ்சா புழக்கத்தை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தி உள்ளார்.

குறிப்புச் சொற்கள்