சென்னை: கடந்த ஆறு மாதங்களில் தமிழகம் முழுவதும் ஏறக்குறைய 7,000 பேர் பாம்புக்கடிக்கு ஆளாகியுள்ளனர். அவர்களில் ஆறு பேர் உயிரிழந்துவிட்டனர்.
ஆக அதிகமாக, திருவண்ணாமலை மாவட்டத்தில் 697 பேர் பாம்புக்கடிக்கு ஆளாகியுள்ளதாகச் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளர்.
கிருஷ்ணகிரியில் 572 பேரும் விழுப்புரத்தில் 485 பேரும் திருச்சியில் 480 பேரும் கோவையில் 411 பேரும் தருமபுரியில் 361 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாகச் சுகாதாரத்துறை அறிக்கை தெரிவித்துள்ளது.
சென்னையில் மட்டும் 186 பேர் பாம்புக்கடியால் பாதிக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது.
பெரும்பாலான சம்பவங்களில் நாகப்பாம்பு, கண்ணாடி விரியன், சுருட்டை விரியன், கட்டு விரியன் ஆகிய நச்சுத்தன்மை கொண்ட பாம்புகளால்தான் மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திருவண்ணாமலை, வேலூர், கிருஷ்ணகிரி, கோவை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் விவசாய நிலங்களிலும் புதர் மண்டிக் கிடக்கும் பகுதிகளிலும்தான் அதிகமான பாம்புக்கடிச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகப் பொதுச் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
அனைத்து ஆரம்பச் சுகாதார நிலையங்களிலும் பாம்புக்கடிக்கான மருந்துகள் உள்ளதால், உயிரிழப்புகள் அதிகரிக்காமல் தடுக்கப்பட்டதாகப் பொதுச் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


