சென்னை: கடந்த நான்கு ஆண்டுகளில் கோவில்களுக்குச் சொந்தமான 7,400 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாகத் தமிழ்நாட்டு அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.
அவற்றின் மதிப்பு ரூ.7,132 கோடி என்று இந்து சமய, அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு கூறியுள்ளார்.
இதன் தொடர்பில் அறநிலையத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 2021ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் வென்று திமுக ஆட்சிக்கு வந்தது. அதன்பிறகு, 2,392 கோவில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, திருக்குட நன்னீராட்டு விழா இடம்பெற்றது.
“மேலும், 12,202 கோவில்களில் 5,515 கோடி ரூபாய் செலவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. திருத்தலங்களின் ஒருங்கிணைந்த பெருந்திட்டத்தின் ஒரு பகுதியாக, ரூ.1,770 கோடி செலவில் 19 கோவில் வளாகங்களில் கூடுதல் கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. அத்துடன், 7,132 கோடி ரூபாய் மதிப்புள்ள 7,400 ஏக்கர் கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளன,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

