தமிழகத்தில் புதிதாக 75,702 பேருக்கு காசநோய் பாதிப்பு

1 mins read
18de9bd8-96f7-4af2-b23c-5edcd02c8d86
தமிழகத்தில் நடப்பாண்டில் புதிதாக 75,702 பேருக்கு காசநோய் பாதிப்பு இருப்பதாகத் தெரியவந்துள்ளது. - படம்: ஏஎஃப்பி

சென்னை: தமிழகத்தில் நடப்பாண்டில் புதிதாக 75,702 பேருக்கு காசநோய் பாதிப்பு இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் மத்திய, மாநில அரசுகள் 2025ஆம் ஆண்டுக்குள் காசநோயை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்ற இலக்குடன் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றன.

தமிழகத்தில் நோயாளிகளைக் கண்டறிதல், கூட்டு மருந்து சிகிச்சைகளை அளித்தல், தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் முதலிய காசநோய் ஒழிப்புத் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மாநிலம் முழுவதும் காச நோயாளிகளுக்குத் தேவைப்படும் மருந்துகள், முன்களப் பணியாளர்கள் மூலம் வீடுகளுக்கே சென்று வழங்கப்படுகின்றன. வீடுகளிலேயே சளி மாதிரி எடுக்கப்பட்டு, தேவைப்படுபவர்களுக்கு நடமாடும் ‘ஸ்கேன்’ கருவிகளை வீடுகளுக்கே அனுப்பி ‘ஸ்கேன்’ எடுக்கப்படுகிறது.

இதுபோன்ற நடவடிக்கைகளால், அந்நோயின் தாக்கத்தால் பாதிக்கப்படுபவர்களில் 84 விழுக்காட்டினர் முதல் சிகிச்சையிலேயே குணப்படுத்தப்படுகின்றனர். மீதமுள்ளவர்கள் தொடர் சிகிச்சைகள் மூலம் குணமடைந்து வருகின்றனர்.

இந்நிலையில், நடப்பாண்டில் நாடு முழுவதும் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் காசநோய் பாதிப்புடன் அனுமதிக்கப்பட்டோரின் தரவுகளை சுகாதாரத் துறை ஆய்வு செய்தபோது, 21 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு அந்நோய் இருந்தது கண்டறியப்பட்டது.

தமிழகத்தில் 75,702 பேருக்கு காசநோய் பாதிப்பு இருந்தது. அவர்களில், தனியார் மருத்துவமனைகளில் 24,685 பேரும், அரசு மருத்துவமனைகளில் 50,837 பேரும் முதல்கட்ட சிகிச்சை பெற்றுள்ளனர். கடந்தாண்டு இதே காலகட்டத்தில் தமிழகத்தின் எண்ணிக்கை, 3% அதிகமாக இருந்ததாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்