76வது குடியரசு தினம்: சென்னை மெரினாவில் மூவண்ணக் கொடியை ஏற்றினார் ஆளுநர் ஆர்.என். ரவி

2 mins read
318c406c-b4aa-40c1-9208-42b5e6a9617a
முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோர் முன்னிலையில் மூவண்ணக்கொடியை ஆளுநர் ஆர்.என். ரவி ஏற்றினார்.  - படம்: தமிழக ஊடகம்

சென்னை: நாடு முழுவதும் குடியரசு தினம் ஜனவரி 26ஆம் தேதி கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, சென்னை மெரினா கடற்கரையில் தேசியக் கொடியை ஏற்றி அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரைப் பகுதியில் ஞாயிறு காலை 8 மணி அளவில் தேசியக் கொடி ஏற்றப்பட்டது. விழாவில் தேசியக் கொடியை ஏற்றுவதற்காக வருகை தந்த ஆளுநர் ஆர்.என். ரவியை, முதல்வர் மு.க. ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். விழாவில், அமைச்சர் துரைமுருகன், சபாநாயகர் அப்பாவு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதையடுத்து, முப்படைகளின் உயர் அதிகாரிகள் ஆளுநருக்கு அறிமுகப்படுத்திவைக்கப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோர் முன்னிலையில் மூவண்ணக்கொடியை ஆளுநர் ஆர்.என். ரவி ஏற்றினார். அப்போது ராணுவ ஹெலிகாப்டர் மூலம் பூ மழை தூவப்பட்டது. இதன் தொடர்ச்சியாக நாட்டுப்பண் இசைக்கப்பட்டது. அனைவரும் எழுந்து நின்று தேசிய கீதத்துக்கு மரியாதை செலுத்தினர்.

பின்னர் ஆளுநர் ஆர்.என் ரவி, முப்படையினர் உள்பட நாட்டின் பாதுகாப்புப் படையினரின் அணி வணக்க மரியாதையை ஏற்றுக்கொண்டார். இந்திய விமானப்படை, கடற்படை, ராணுவ கூட்டுக்குழல் முரசு இசைப் பிரிவினர், கடலோரக் காவற்படை, ரயில்வே பாதுகாப்புப் படை, தமிழ்நாடு காவற்படை, தமிழ்நாடு சிறப்புக் காவல் பெண் படை, தமிழ்நாடு ஆயுதப் படையினரின் பேரிடர் மீட்புப் படை, ஆந்திரப் பிரதேச ஆண்கள் சிறப்பு காவற்படை, தமிழ்நாடு கமாண்டோ படை, கடலோரக் காவல் பாதுகாப்புப் படை, குதிரைப் படை, வனத்துறை பிரிவினர், சிறைத்துறை பிரிவினர், தீ அணைப்பு மற்றும் மீட்புப் படைப் பிரிவினர், ஊர்க்காவல் ஆண்கள் படைப் பிரிவினர், பள்ளி மாணவர்களின் கூட்டுக்குழல் இசை அணிவகுப்பு உள்ளிட்டோர் கம்பீரமாக அணிவகுத்து வந்து ஆளுநருக்கு மரியாதை செலுத்தினர்.

இதனையடுத்து, பல்வேறு சாதனைகளைப் புரிந்தோருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் விருதுகளை வழங்கினார். வீரதீரச் செயலுக்கான அண்ணா பதக்கம் வெற்றிவேலுக்கு வழங்கப்பட்டது. கோட்டை அமீர் மத நல்லிணக்க பதக்கம் ராமநாதபுரத்தைச் சேர்ந்த அமீர் அம்சாவுக்கு வழங்கப்பட்டது. அதிக உற்பத்தித் திறன் பெறும் வேளாண் உழவர் துறை சிறப்பு விருது முருகவேலுக்கு வழங்கப்பட்டது. காந்தியடிகள் காவலர் பதக்கம் சின்னக்காமணனுக்கு வழங்கப்பட்டது. அனைவருக்கும் முதல்வர் மு.க. ஸ்டாலின் விருதுகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து கலை நிகழ்ச்சிகளும், பல்வேறு துறைகளின் வாகன அணிவகுப்பும் நடைபெற்றது. பின் நாட்டுப் பண் இசைக்கப்பட்டு விழா இனிதே நிறைவடைந்தது.

குறிப்புச் சொற்கள்