சென்னை: தமிழ்நாட்டின் ஓசூரில் செயல்பட்டு வரும் டாடா மின்னணுத் தொழிற்சாலையின் 80% வேலைகள் தமிழர்களுக்கு வழங்கப்படுவதை அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
“தமிழகத்தின் ஓசூரிலும் கர்நாடக மாநிலத்தின் கோலாரிலும் இயங்கிவரும் டாடா மின்னணு ஆலைகளுக்கு உத்தராகண்ட் மாநிலத்திலிருந்து 4,000 பெண்களை வேலைக்கு எடுக்கவுள்ளதாக டாடா நிறுவனம் அறிவித்துள்ளது. தமிழக மக்களின் வேலைவாய்ப்பைப் பறிக்கும் இச்செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது.
“தமிழ்நாட்டு இளைஞர்களுக்கும் இளம்பெண்களுக்கும் கிடைக்க வேண்டிய வேலைவாய்ப்புகளை இன்னொரு மாநிலத்திற்கு தாரை வார்ப்பதை அனுமதிக்க முடியாது. அவ்வாறு செய்வதற்கு டாடா நிறுவனத்திற்கு உரிமையும் இல்லை,” என்று மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
“கடந்த அதிமுக ஆட்சியின்போது ஓசூரில் ரூ.4,684 கோடியில் மின்னணு ஆலை அமைக்க டாடா நிறுவனம் தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டது. அதற்காக மானிய விலையில் 500 ஏக்கர் நிலம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளைத் தமிழக அரசு வழங்கியுள்ளது.
“அந்த ஆலையில் 18,250 பேருக்கு வேலை வழங்கப்பட வேண்டும். அவற்றில் குறைந்தது 80% வேலைகளை, அதாவது 14,600 வேலைகளைத் தமிழ்நாட்டவர்க்கு வழங்க வேண்டும். அதன்மூலம், அவர்களின் குடும்பங்கள் பொருளியல் தன்னிறைவு பெறும் என்பதுதான் இத்தகைய புரிந்துணர்வு ஒப்பந்தங்களைச் செய்துகொள்வதன் நோக்கம். அதனைவிடுத்து, தமிழகத்திடமிருந்து சலுகைகளைப் பெற்றுக்கொண்டு வெளிமாநிலத்தவருக்கு வேலை வழங்குவது தமிழகத்தைச் சுரண்டும் செயல். அதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது,” என்றும் அவர் கூறியுள்ளார்.
திமுக ஆட்சிக்கு வந்தால் தனியார் நிறுவன வேலைவாய்ப்புகளில் 75% தமிழர்களுக்குக் கிடைப்பதை உறுதிசெய்ய சட்டம் இயற்றப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் வாக்குறுதி அளித்திருந்ததை மருத்துவர் ராமதாஸ் சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில், தமிழ்நாட்டில் தனியார் நிறுவனங்களில் 80% பணிகள் தமிழர்களுக்கு வழங்கப்படுவதை உறுதிப்படுத்தும் சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி இருக்கிறார்.