800 ஆண்டுகள் பழமைவாய்ந்த கல்வெட்டு

800 ஆண்டுகள் பழமைவாய்ந்த கல்வெட்டு

1 mins read
df43e7da-719e-4059-b855-d69fdd08083b
ராமேசுவரத்தில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டு. - படம்: ஊடகம்

ராமநாதபுரம்: ராமேசுவரத்தின் பெருவயல் பகுதியில் அமைந்துள்ள ரெணபலி முருகன் கோவிலில் மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்து கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது ஏறக்குறைய 800 ஆண்டுகள் பழமைவாய்ந்த கோவில் ஆகும்.

கி.பி. 1728 காலகட்டத்தில் கட்டயத்தேவர் என்ற குமாரமுத்து விஜயரகுநாத சேதுபதி என்ற மன்னரால் இக்கோவில் கட்டப்பட்டது என்றும் அதன் பின்னர் கி.பி. 1736ஆம் ஆண்டில் இக்கோவிலுக்கு மன்னர் குமாரமுத்து சேதுபதி பெருவயல் கிராமத்தை தானமாகக் கொடுத்தார் என்றும் அண்மையில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இத்தகவலை ராமநாதபுரம் மாவட்ட தொல்லியல் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், அந்நிறுவனத்தின் தலைவர் ராஜகுரு செய்தியாளர்களிடம் பேசுகையில், புதிதாக கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டு கோவிலில் உள்ள தூண் போதுகையில் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவித்தார்.

இத்தூணின் மேற்பகுதியை, உத்திரத்துடன் இணைக்கும் விரிந்த கைபோன்ற அமைப்பை போதிகை என்பர். பாண்டியர், நாயக்கர், சேதுபதி மன்னர் காலங்களில் கட்டப்பட்ட கோவில் தூண்களின் வெவ்வேறு வகையான போதிகைகளை அமைத்து அழகுபடுத்துவர். தற்போது கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டு பாண்டியர் காலத்தைச் சேர்ந்த வெட்டுப்போதிகை என்ற வடிவமைப்பைச் சேர்ந்ததாகும்.

பாண்டியர் கால வெட்டுப்போதிகைகளைச் சேதுபதி கால கருங்கல் தூண்களுடன் இணைத்து இக்கோவில் பிரகாரம் அமைக்கப்பட்டுள்ளது என்று ஆய்வாளர் ராஜகுரு மேலும் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்