சென்னை: தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் ஒரே நாளில் சுமார் 82,000 நிலுவை வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.576 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் தமிழகத்தில் உள்ள பல்வேறு இடங்களில் தமிழக மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பாக மக்கள் நீதிமன்ற அமர்வுகள் (லோக் அதாலத்) அமைக்கப்பட்டு விசாரணை நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில், சனிக்கிழமை அன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் எட்டு அமர்வுகளும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நான்கு அமர்வுகளும் அமைக்கப்பட்டு நிலுவை வழக்குகள் விசாரிக்கப்பட்டன.
மேலும் மாவட்ட, கீழ் நீதிமன்றங்களிலும் 429 அமர்வுகள் அமைக்கப்பட்டன. தீர்வு காணப்பட்ட வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக உரிய இழப்பீட்டுத் தொகைக்கான காசோலைகள் வழங்கப்பட்டன.
சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற நீதிபதி லிங்கேஸ்வரன் தலைமையிலான அமர்வு, 1,355 வழக்குகளுக்குத் தீர்வுகண்டது.
அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி விபத்தில் உயிரிழந்த ஓட்டுநரின் குடும்பத்துக்கு ரூ.1.34 கோடி இழப்பீடாக வழங்கப்பட்டது எனத் தமிழக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.