தமிழகத்தில் இணைய மோசடி நடவடிக்கைகளுக்கு உதவிய 837 பேர் கைது

தமிழகத்தில் இணைய மோசடி நடவடிக்கைகளுக்கு உதவிய 837 பேர் கைது

2 mins read
290eea15-f2a1-47cf-82f3-f891b98606b6
மகேஷ் குமார் அகர்வால். - கோப்புப் படம்: தினத்தந்தி
multi-img1 of 2
Google News Preferred Icon

சென்னை: தமிழகத்தில் இணைய மோசடி நடவடிக்கைகளுக்கு உதவிய 837 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாநிலம் முழுவதும் இரண்டு நாள்கள் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு அதிரடி நடவடிக்கையின்போது இணைய மோசடிக்கு உதவியவர்களிடம் இருந்து 200க்கும் மேற்பட்ட கைப்பேசிகள், ‘சிம்’ அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அண்மைக் காலமாக இந்தியாவின் பிற பகுதிகளைப் போலவே தமிழகத்திலும் இணையக் குற்றச்செயல்கள் அதிகரித்து வருகின்றன.

காவல்துறை உயர் அதிகாரிகள், முக்கியத் தலைவர்களின் பெயர்களைக் கூறி பல மோசடிக் கும்பல்கள் பொதுமக்களை மிரட்டி கோடிக்கணக்கில் பணம் பறிக்கின்றனர்.

இதையடுத்து, குற்றச்செயல்களைத் தடுக்கும் வகையில் தமிழகக் காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மோசடிகளில் ஈடுபடும் கும்பல்கள், தமிழகம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை இடைத்தரகர்கள், முகவர்களாகப் பயன்படுத்தி வருகின்றன. அவர்களுக்கு மோசடித் தொகையில் 10 விழுக்காடு வரை பங்கு வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, இந்த இடைத்தரகர்கள், முகவர்களை அடையாளம் கண்டு கைது செய்ய தமிழகக் காவல்துறை தலைவர் மகேஷ் குமார் அகர்வால் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார்.

அதன் பேரில், கடந்த ஆகஸ்ட் 6ஆம் தேதி தொடங்கி 7ஆம் தேதி வரை நீடித்த 48 மணி நேரச் சிறப்பு அதிரடி வேட்டையின்போது ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களில் 837 பேர் இணையக் குற்றங்களுக்கு உதவியதாகக் குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ளனர். இந்த நடவடிக்கையில் ரூ.545 கோடி மதிப்பிலான மோசடிப் பணப் பரிவர்த்தனைகள் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது.

இணையக் குற்ற வழக்குகளில் பதிவு செய்யப்பட்ட 601 முதல் தகவல் அறிக்கைகளில் தொடர்புடைய 837 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தமிழகக் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

மோசடிப் பணத்தைப் பெறவும் பல்வேறு கணக்குகளுக்கு மாற்றவும் பயன்படுத்தப்படும் ‘மியூல்’ வங்கிக் கணக்குகளைத் தடுக்க 157 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மேலும், மின்னிலக்க ஆதாரங்களைக் காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

இதன்மூலம் இணையக் குற்றக் கும்பல்களின் அடுத்தடுத்த அடுக்குகளில் செயல்படும் நபர்கள் மற்றும் வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் உள்ள கூட்டாளிகளைக் கண்டறிந்து கைது செய்யும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

மோசடி செய்யப்பட்ட பணத்தை மீட்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் கடந்த இரு நாள்களில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு நடவடிக்கையானது, இணையக் குற்றக் கட்டமைப்பைச் சீர்குலைக்கும் வகையில் அமைந்ததாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்