விழுப்புரம்: பக்திப் பரவசத்தில் திளைத்த பக்தர்கள் சாமிக்குப் படைக்கப்பட்ட 9 எலுமிச்சை பழங்களை ரூ.1.43 லட்சத்துக்கு ஏலம் எடுத்தனர்.
இது விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அடுத்த ஒட்டனந்தல் கிராமத்தில் காணப்படும் இரட்டைக் குன்றின் மீது ரத்தினவேல் முருகன் கோவிலில் ஆண்டுதோறும் நிகழும் சம்பவம்தான்.
இக்கோவில் கருவறையில் வேல் மட்டுமே இருக்கும். இங்கு பங்குனி உத்திரத் திருவிழா கடந்த 1ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவிழா உற்சவத்தில் வேலில் அன்றாடம் படைக்கப்படும் ஒன்பது எலுமிச்சை பழங்கள், இடும்பன் பூசையில் வைத்து ஏலம் விடும் நிகழ்வு அண்மையில் நடைபெற்றது. முதல் நாள் எலுமிச்சை பழம், ரூ.45,000க்கு ஏலம் போனது.
இதேபோல் மற்ற எட்டு பழங்களும் ரூ.15 ஆயிரம், ரூ.16 ஆயிரத்துக்கு ஏலம் போனது. இதன்மூலம் 9 எலுமிச்சை பழங்களையும் ரூ.1 லட்சத்து 43 ஆயிரத்துக்கு பக்தர்கள் ஏலம் எடுத்தனர்.
இந்த எலுமிச்சை பழங்கள் பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. குறிப்பாக, இப்பழங்களை உட்கொண்டால் குழந்தை வரம் கிட்டும், திருமணம் கைகூடும், குடும்ப பிரச்சினைகள் சரியாகும் என்கின்றனர்.
கோவில் ஏலத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் பங்கேற்றனர். எலுமிச்சை பழத்தை ஏலம் எடுத்தவர்கள், தங்கள் உடலில் தண்ணீரை ஊற்றிக் கொண்டு பூசாரி முன்பு மண்டியிட்டு எலுமிச்சம் பழத்தை பெற்றுக் கொண்டனர்.
இடும்பனுக்கு படைக்கப்பட்ட கருவாட்டுக் குழம்பு சாதம் பிரசாதமாக அனைவருக்கும் வழங்கப்பட்டது.

