சென்னை: இந்தியா முழுவதும் தென்னக ரயில்வே இயக்கும் ரயில்களில் கடந்த 20 நாள்களில் ஏறத்தாழ 9 கோடிப் பேர் பயணம் செய்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 21) செய்தியாளர்களைச் சந்தித்த சென்னை பிரிவின் ரயில்வே மேலாளர் ஷைலேந்திர சிங், தென்னக ரயில்வே தீபாவளியை முன்னிட்டு 111 சிறப்பு ரயில்களை இயக்குவதாகக் கூறினார். அவை மொத்தம் 435 பயணச் சேவைகளை வழங்கின. அந்த ரயில்களில் 85, தென்னக ரயில்வேயால் இயக்கப்படுபவை என்றும் இதர 26 ரயில்கள் இந்தியாவின் மற்ற ரயில்வே பிரிவுகளுக்குச் சொந்தமானவை என்றும் கூறப்பட்டது.
தேவை அதிகமுள்ள சென்னை-மதுரை-திருநெல்வேலி-கன்னியாகுமரி, சென்னை-கோட்டயம், சென்னை-மங்களூரு, சென்னை-இராமநாதபுரம், கொச்சுவெலி-பெங்களூரு, கொச்சுவெலி-மும்பை, கொச்சுவெலி-டெல்லி போன்ற பாதைகளில் அந்தச் சிறப்பு ரயில்கள் சேவை வழங்கின.
ஆந்திரப் பிரதேசம், மேற்கு வங்கம், பீகார் உள்ளிட்ட மேலும் பல பகுதிகளில் கூடுதல் ரயில்களும் இயக்கப்பட்டதாகத் திரு சிங் கூறினார். சென்னை ரயில்வே பிரிவு மட்டும் 176 கூடுதல் சிறப்பு ரயில்களை இயக்கியதாகவும் அவர் சொன்னார்.

