அண்ணன் சீர் பயனாளிகளுக்கு ஆதார் எண் கட்டாயம்: தமிழக அரசு

அண்ணன் சீர் பயனாளிகளுக்கு ஆதார் எண் கட்டாயம்: தமிழக அரசு

கோப்புப் படம்: தினமணி

20 Oct 2026 - 4:58 pm

1 mins read

சென்னை: தமிழகத்தில் ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்களின் திருமண நிதியுதவிக்காகச் செயல்படுத்தப்படும் ‘அண்ணன் சீர்’ திட்டத்தின்கீழ் பயன்பெற ஆதார் எண் கட்டாயம் என மாநில அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து சமூக நலன், மகளிர் உரிமைத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், தகுதியுள்ள பெண்களுக்குத் திருமணத்தின்போது 8 கிராம் (22 காரட்) தங்க நாணயமும் தரமான பட்டுப் புடவையும் வழங்கி கெளரவிக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தை வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுத்தவும் முறைகேடுகளைத் தவிர்க்கவும் பயனாளிகளின் அடையாளச் சரிபார்ப்பு அவசியமாக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் பெண்கள் தங்களின் ஆதார் எண்ணை அளிக்க வேண்டும். இதுவரை ஆதார் அட்டை பெறாத பெண்கள், உடனடியாக அருகிலுள்ள ஆதார் பதிவு மையங்கள் மூலம் விண்ணப்பித்து, அதற்கான அடையாளச் சீட்டைப் பதிவு செய்யலாம்.

ஆதார் அட்டை கிடைக்கப்பெறும் வரை மாற்று ஆவணங்களாக வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, கடப்பிதழ், புகைப்படத்துடன் கூடிய வங்கிக் கணக்குப் புத்தகத்தைப் பயன்படுத்திக் கொள்ள அரசு விலக்கு அளித்துள்ளது.

மேலும், விரல்ரேகை தரம் குறைவு போன்ற தொழில்நுட்பச் சிக்கல்களால் ஆதார் சரிபார்ப்பில் சிரமம் ஏற்பட்டால், கருவிழிப் பதிவு அல்லது முக அங்கீகாரம் (Face Authentication) மூலம் சரிபார்க்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கிராமப்புறப் பெண்களின் வசதிக்காகச் சிறப்பு முகாம்களை நடத்தவும் மாவட்ட நிர்வாகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. குடும்பத்தின் வருமான வரம்பு ஆண்டுக்கு ரூ.2.50 லட்சத்துக்குள் இருக்கும் ஏழை எளிய குடும்பப் பெண்களுக்கு இத்திட்டம் பெரும் ஆதரவாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்
திட்டம்பெண்திருமணம்ஆதார்