சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகி ஆதவ் அர்ஜுனா, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் சந்தித்துப் பேசியிருப்பது அரசியல் களத்தில் பல்வேறு ஆரூடங்களுக்கு வித்திட்டுள்ளது.
ஆதவ் அர்ஜுனாவின் ‘வாய்ஸ் ஆஃப் காமன்’ நிறுவனத்துக்கும் தவெகவுக்கும் இடையே முக்கிய ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாகி இருப்பதாகவும் மிக விரைவில் இருதரப்பும் இணைந்து செயல்பட இருப்பதாகக் கூறப்படுகிறது.
அநேகமாக, தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலின்போது தவெகவுக்கு ஏற்ற வெற்றி வியூகங்களை அமைத்துத் தரும் பொறுப்பை ஆதவ் அர்ஜுனா ஏற்றுக்கொண்டுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சென்னை பட்டினம்பாக்கம் பகுதியில் உள்ள தனது அடுக்குமாடிக் குடியிருப்பில் வைத்து ஆதவ் அர்ஜுனாவைச் சந்தித்துள்ளார் விஜய்.
இதையடுத்து, தவெகவின் நிர்வாகிகள் நியமனம் அரசியல் நடவடிக்கைகள், தேர்தல் பிரசாரம் ஆகிய அனைத்துக்கும் அவர்தான் பொறுப்பு வகிப்பார் என்றும் கூறப்படுகிறது.
தனியார் நிறுவனத்துடனான ஒப்பந்தம் போல் அல்லாமல், கட்சியில் இணைந்து களப் பணியாற்றுமாறு ஆதவ் அர்ஜுனாவிடம் விஜய் கேட்டுக் கொண்டதாகவும், அதை அவர் ஏற்றுக்கொண்டதாகவும் தெரிகிறது.
அநேகமாக, பிப்ரவரி 2ஆம் தேதியன்று, தவெகவில் ஏற்க உள்ள பொறுப்பு குறித்து அதிகாரபூர்வமாக விஜய் அறிவிப்பார் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்ததாக தமிழக ஊடகச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
‘வாய்ஸ் ஆஃப் காமன்’ நிறுவனம் சார்பில் நடைபெற்ற அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில், விஜய் தரப்பில் இருந்து சிறப்புரையாற்றிய நிலையில், விசிக தலைவர் திருமாவளவன் அந்நிகழ்வைப் புறக்கணித்தார்.
தொடர்புடைய செய்திகள்
இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, விசிகவில் இருந்து விலகினார் ஆதவ் அர்ஜுனா.
இந்நிலையில், தவெகவில் அரசியல் ஆலோசகராக இருந்த ஜான் ஆரோக்கியசாமி, அப்பொறுப்பில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டதையடுத்து, அந்தப் பதவிக்கு ஆதவ் அர்ஜுனா நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.