சென்னை: நிபந்தனையுடன் பிணையில் விடுவிக்கப்பட்ட சவுக்கு சங்கர், நீதிமன்றத்தில் சரணடையாமல் ஆந்திராவில் தலைமறைவாக இருந்து வந்தார்.
அவரைத் தமிழகக் காவல்துறை ஏப்ரல் 8ஆம் தேதி கைதுசெய்தது.
‘சவுக்கு மீடியா’ எனும் ஒளிவழி அலைவரிசையின் தலைமைச் செயல் அதிகாரி சவுக்கு சங்கர்மீது இரு மோசடி வழக்குகள் பதிவுசெய்யப்பட்டிருந்தன.
அதனையடுத்து, கடந்த ஆண்டு டிசம்பர் 13ஆம் தேதி அவர் கைது செய்யப்பட்டார். அவருக்கு உடல்நலப் பிரச்சினைகள் இருப்பதால் பிணையில் விடுவிக்கக்கோரி அவரது தாயார் கமலா மனுத்தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் மார்ச் 25ஆம் தேதி வரை அவருக்கு நிபந்தனையுடன்கூடிய இடைக்காலப் பிணை வழங்கியிருந்தது.
மேற்குறிப்பிட்ட தேதிக்குப் பிறகு நீதிமன்றத்தில் சரணடைய வேண்டிய அவர் தலைமறைவானார்.
ஆந்திராவில் தலைமறைவான சவுக்கு சங்கரைத் தனிப்படை அமைத்துச் சென்னை காவல்துறை அதிகாரிகள் தேடிவந்தனர்.
இந்நிலையில், அவர் ஆந்திர மாநிலத்தில் உள்ள தங்கு விடுதி ஒன்றில் இருப்பதாகக் காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது.
தொடர்புடைய செய்திகள்
இதையடுத்து, ஏப்ரல் 8ஆம் தேதி அங்கு விரைந்த அதிகாரிகள் சவுக்கு சங்கரைக் கைது செய்தனர்.

