தலைவர்களின் கனவில் தனிப்பெரும்பான்மை

தலைவர்களின் கனவில் தனிப்பெரும்பான்மை

2 mins read
bf9deab4-a1fa-469c-9a3a-1542f6f80aad
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும்பான்மை பெற 118 இடங்களில் வெல்ல வேண்டும். - படம்: செயற்கை நுண்ணறிவு

தமிழகத் தேர்தல் களம் இதுவரை காணாத குழப்பக் களமாக உள்ளது. யார் வெல்லக்கூடும் என எளிதில் கணிக்கக்கூடிய அளவுக்கு எதுவும் வெளிச்சமாகத் தெரியவில்லை.

திமுக, அதிமுக, நாதக, தவெக என கண்ணுக்குத் தெரிந்த நான்கு முனைப் போட்டிகளோடு, டாக்டர் ராமதாஸ்-விகே சசிகலா, டாக்டர் கிருஷ்ணசாமி, தமிழ்நாடு வாழ்வுரிமைக் கட்சி என இன்னும் பலர் தனியாகவும் கூட்டணியாகவும் களம் காண்கிறார்கள்.

அந்தக் கூட்டணிகளுக்குள்ளும் குழப்பம் உள்ளது. திமுக-காங்கிரஸ் உரசல் கடைசி வரை நீடித்தது. விசிக-தேமுதிக பல தொகுதிகளில் பாராமுகங்களாக வேலை செய்தன. கம்யூனிஸ்டுகள் அவர்களின் சொந்தத் தொகுதியைவிட்டு அவ்வளவாக நகரவில்லை.

அதிமுகவின் எடப்பாடி பழனிசாமியும் பிரதமர் நரேந்திர மோடியும் ஒரே மேடையில் பிரசாரம் செய்ததுபோல மு.க. ஸ்டாலின் - ராகுல் காந்தி செய்யவில்லை. காங்கிரஸ் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளில் மட்டுமே ராகுல் காந்தி பிரசாரம் செய்தார். எல்லாத் தேர்தல்களிலும் முகம் காட்டும் பிரியங்கா காந்தி தமிழ்நாட்டை எட்டிப் பார்க்கவில்லை.

இம்முறையாவது வென்றுவிட வேண்டும் என்ற வேட்கையில் பாஜக வேட்பாளர்களும் சொந்தத் தொகுதிகளிலேயே அதிகக் கவனம் செலுத்தினாலும் ஆறுதலாக அண்ணாமலை பல இடங்களுக்குச் செல்கிறார். அங்கு மட்டும் பெரிய குழப்பம் தவிர்க்கப்பட்டுள்ளது.

அதிமுக கூட்டணிக் கட்சியான பாமக ஈரணியாகக் களம் காண்கிறது. மனைவியைக் களமிறக்கி இருக்கிறார் அன்புமணி. மருமகளின் வெற்றியைப் பறிக்கப் பார்க்கிறார் டாக்டர் ராமதாஸ். திடீரென்று இரட்டை இலையைத் தூக்கிக்கொண்டு சுந்தர் சி வந்ததால் அதிமுகவினரிடையே குழப்பம்.

கணிக்க முடியாத களத்தைக் கணித்து, பல்வேறு அமைப்புகள் வெளியிட்ட கருத்துகள் வாக்காளர்களிடையே குழப்பத்தை அதிகரித்தன. அதிமுக கூட்டணி வெற்றிபெறும், திமுக கூட்டணி வெற்றிபெறும், விஜய் அலையால் தொங்கு சட்டமன்றம் ஏற்படும் என்றெல்லாம் கணிப்புகள் வெளியிடப்பட்டன.

அதனால், 118 என்னும் தனிப்பெரும்பான்மை எண்ணே முன்னணிக் கட்சித் தலைவர்களின் கனவில் அன்றாடம் வந்துசெல்வதாகக் கூறுகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

“வாக்குகளை தவெக தகர்த்தாலும் 176 தொகுதிகளில் உதயசூரியனை நிறுத்தி இருக்கும் திமுக, ‘தனித்து வெல்வோம்’ என்னும் அசைக்கமுடியாத நம்பிக்கையில் உள்ளது. 2006ல் விஜயகாந்த் அலை ஏற்பட்டபோது 132 தொகுதிகளில் மட்டுமே உதயசூரியனை நிறுத்தி, செய்த தவற்றை இப்போது அது திருத்திக்கொண்டுள்ளது. தேர்தலுக்குப் பிறகு கூட்டணிக் கட்சிகள் காலை வாரும் என்பதையும் திமுக தெரிந்து வைத்திருக்கிறது.

“அதிமுகவும் அதிகமாக 168 இடங்களில் இரட்டை இலையை நிறுத்தி ‘வா பார்ப்போம்’ என்று மல்லுக்கு நிற்கிறது. கூட்டணி கட்டுக்கோப்பாக இருப்பது அதிமுகவுக்குக் கூடுதல் பலம். தவெக என்ற ஒரு கட்சி வராமல் இருந்திருந்தால் உதயசூரியனும் இரட்டை இலையும் இன்னும் குறைவான தொகுதிகளிலேயே நின்றிருக்கும்,” என்கிறார்கள் சிலர்.

“தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, ஆட்சியமைக்கப் பெரும்பான்மை தேவைப்பட்டால் விஜய்யின் ஆதரவைக் கோருவோம்,” என மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே புதிய குழப்பதை ஏற்படுத்தியிருக்கிறார். காங்கிரசுக்குக் கண்ணசைக்கும் தவெக, பாஜக பக்கம் வருமா? வந்தால் முதல்வர் பதவியை விஜய்க்கு பாஜக-அதிமுக கூட்டணி தருமா? இது தேர்தலுக்குப் பிறகு எழக்கூடிய குழப்பம். ஒற்றைக் கட்சி ஏற்படுத்திய குழப்பதை அந்தக் கட்சிதான் தீர்க்க வேண்டும். -திருநா

குறிப்புச் சொற்கள்