திருப்பத்தூர்: பறவைகளைக் காக்க பட்டாசு வெடிக்காமல் தீபாவளி கொண்டாடும் வேட்டங்குடி மக்களைப் பாராட்டும் வகையில் வனத்துறை அதிகாரிகள் அங்குச் சென்று அவர்களுக்கு இனிப்புப் பொட்டலங்கள் வழங்கினர்.
சிவகங்கை மாவட்டத்தின் திருப்பத்தூா் அருகே ஏ.மேலையூா் அய்யாபட்டி ஊராட்சிக்குள்பட்ட கொள்ளுகுடிபட்டி, வேட்டங்குடிபட்டி கிராமங்களில் வேட்டங்குடி பறவைகள் சரணாலயம் உள்ளது.
ஏறக்குறைய 40,000 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட இந்தச் சரணாலயத்திற்கு செப்டம்பர் முதல் வாரத்தில் இருந்து ஆசியா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான பறவைகள் வரத்தொடங்கும்.
பின்னர் அந்தப் பறவைகள் இங்கேயே தங்கி முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும். பின்னர் மீண்டும் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் குஞ்சுகளுடன் தங்களது பகுதிகளுக்குத் திரும்பிச் சென்றுவிடும்.
சின்னச்சீழ்க்கை சிரவி, நீலச்சிரவி, நத்தைக் குத்திநாரை, மஞ்சள் மூக்குநாரை, உன்னிக்கொக்கு, பாம்புத்தாரா, உள்ளிட்ட 3,500க்கும் மேற்பட்ட பறவைகள் இனப் பெருக்கத்துக்கு ஏதுவாகக் கூடுகட்டி வசித்து வருகின்றன.
இதைக் கருத்தில் கொண்டு, வேட்டங்குடி சரணாலயத்தைச் சுற்றி வசிக்கும் மக்கள் காலங்காலமாகத் தீபாவளிக்கு வெடிவெடிப்பதைத் தவிர்த்து வருகின்றனர்.
பறவைகளுக்கு எவ்விதத் தொந்தரவும் இல்லாத வகையில் ஒலி எழுப்பாத தீபாவளியைக் கொண்டாடி வருகின்றனா். அங்குள்ள மக்கள் பறவைகளுக்காக 52 ஆண்டுகளாக பொங்கல், கார்த்திகை, திருவிழாக்கள், கோயில் விழாக்கள் மற்றும் தீபாவளி என எந்தவொரு விழாக் காலத்திலும் பட்டாசு வெடிக்கக்கூடாது என்ற கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளனர்.
இதை மீறுபவர்களுக்கு அபராதம் விதிப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
தொடர்புடைய செய்திகள்
அமைதியான சூழல் நிலவுவதால் பறவைகள் இனப்பெருக்கத்துக்கு இந்தப் பகுதி ஏற்ற இடமாக உள்ளது.
இந்த வட்டாரத்தில் உள்ள சிற்றூர் மக்களைப் பாராட்டும் விதமாக வனத்துறை சார்பில் அவ்வப்போது பரிசுகள் வழங்கப்படுகின்றன.
அந்த வகையில், நடப்பாண்டிலும், கொள்ளுகுடிபட்டி, வேட்டங்குடிபட்டி சிற்றூர் மக்களுக்கு கடந்த செவ்வாய்க்கிழமையன்று இனிப்புகள் வழங்கப்பட்டன.