சென்னை: வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான (என்.ஆர்.ஐ.) இட ஒதுக்கீட்டின் மூலம் மருத்துவம் (எம்.பி.பி.எஸ்.) படிக்க இடம்பெற்ற மூன்று பேரின் கல்லூரிச் சேர்க்கை ரத்து செய்யப்பட்டுள்ளது.
இவர்கள் போலி தூதரகச் சான்றிதழ் சமர்ப்பித்து மருத்துவம் படிப்பதற்குத் திட்டமிட்டது அம்பலமானது.
தமிழகத்தில் மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை வெளிப்படைத் தன்மையுடன் நடந்து வருவதாகவும் எந்தவிதமான முறைகேடுகளும் நிகழாத வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக்குழு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான இட ஒதுக்கீட்டின்கீழ் மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பித்த அறுவரின் தூதரகச் சான்றிதழ்கள் போலி என்பது கண்டறியப்பட்டது.
அதில் மூன்று பேர் எம்.பி.பி.எஸ். இடங்களுக்கான ஒதுக்கீடு பெற்றவர்கள் என்று அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆறு பேரும் இனிமேல் மருத்துவக் கலந்தாய்வில் பங்கேற்பதிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்றும் அவர்களுக்கான ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்டவர்கள்மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவ மாணவர் சேர்க்கைக்குழு மேலும் தெரிவிக்கிறது.