மதுபோதையில் யானையின் மேல் தூங்கிய பாகன் மீது நடவடிக்கை

மதுபோதையில் யானையின் மேல் தூங்கிய பாகன் மீது நடவடிக்கை

படம்: ஊடகடம்

12 Mar 2025 - 6:48 pm

1 mins read

நாகர்கோவில்: மதுபோதையில் யானைமீது தூங்கிய பாகன் மீது வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குமரி மாவட்டம் திற்பரப்பு பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு சொந்தமாக அனுபாமா என்ற பெண் யானை உள்ளது.

இந்த யானையை செவ்வாய்க்கிழமை (மார்ச் 11) காலை பாகன் மேய்ச்சலுக்காக அழைத்துச் சென்றார். பின்னர் மாலையில் பாகன் யானையைத் திற்பரப்புக்கு அழைத்து வந்து கொண்டிருந்தார். அப்போது பாகன் மதுபோதையில் இருந்ததாகத் தெரிகிறது.

இந்த நிலையில் திடீரென அண்டுகோடு பகுதியில் வைத்து மதுபோதையில் இருந்த பாகன் யானை மீது படுத்து உறங்கியதாகக் கூறப்படுகிறது. அப்போது பாகனுடைய கையில் இருந்த அங்குசம் கீழே விழுந்தது. அந்த அங்குசத்தை யானை எடுத்து பாகனிடம் கொடுத்தது. பாகன் வாங்காததால் அங்குசம் மீண்டும் கீழே விழுந்தது. இதனால் ஏதோ விபரீதம் எனத் தெரிந்த யானை சாலையின் ஓரமாக ஒதுங்கி அப்படியே நின்றது.

இதுபற்றி தகவலறிந்து யானை உரிமையாளரும், வனத்துறை அலுவலரும் மதுபோதையில் யானையின் மீது படுத்து கிடந்த பாகனை கீழே இறக்க பகீரத முயற்சிகளை எடுத்தனர். ஆனால் அவர் இறங்கவில்லை.

பின்னர் சிறிது நேரம் கழித்து போதை தெளிந்து பாகன் கீழே இறங்கினார்.

இதுகுறித்து வனத்துறையினர் யானை உரிமையாளர், பாகன்மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்
யானைவனத்துறைநடவடிக்கை