உயர்கல்வி நிலையங்களின் தரத்தை மேம்படுத்தத் தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் பாலகுருசாமி கூறியிருக்கிறார்.
மத்திய அரசாங்கப் பணியாளர் தேர்வாணையத்தின் (யுபிஎஸ்சி) முன்னாள் உறுப்பினருமான பேராசிரியர் பாலகுருசாமி, தமிழ்நாட்டில் செயல்படும் பல்கலைக்கழகங்கள் நெருக்கடிமிகுந்த சவால்களை எதிர்கொள்வதாகத் தமிழக முதல்வர் மு க ஸ்டாலினுக்கு அனுப்பிய மனுவில் குறிப்பிட்டார்.
உடனடியாகத் தீர்வுகாணப்படாவிட்டால் அவற்றின் தரத்துடன் தன்னாட்சி நிலை, உலகளாவிய போட்டித் திறன் முதலியவையும் பாதிக்கப்படும் என்றார் அவர்.
தமிழகப் பல்கலைக்கழகங்களில் தேசியக் கல்விக் கொள்கையை முறையாக நடைமுறைப்படுத்துவதில் சில சிக்கல்கள் இருப்பதாக அவர் சொன்னார்.
உடனடியாக முடிவு எடுக்கப்படவில்லை என்றால் அது குழப்பத்தை உண்டாக்கும். தமிழகத்தின் சமூக, பொருளியல், மொழிச் சூழலுக்கு ஏற்றவாறு தேசியக் கல்விக் கொள்கை இலக்குகளை அடையத் தெளிவான செயல் திட்டத்தை விரைவில் உருவாக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
தமிழகத்தில் பெரும்பாலான பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்கள், நிரந்தரப் பதிவாளர்கள், தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர்கள், கணக்கு அலுவலர்கள் இல்லை என்று பேராசிரியர் பாலகுருசாமி குறிப்பிட்டார்.
இதனால் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். ஆசிரியர்கள், அலுவலர்களுக்கு ஊதியம் வழங்கமுடியாத அளவுக்குப் பல்கலைக்கழகங்கள் நிதி நெருக்கடியில் சிக்கியிருப்பதாகவும் அவர் சொன்னார்.
சில பரிந்துரைகளையும் பேராசிரியர் பாலகுருசாமி முன்வைத்தார்.
தொடர்புடைய செய்திகள்
உயர்கல்வியை மதிப்பீடு செய்யவும் சீரமைப்புக்கான செயல் திட்டங்களைப் பரிந்துரைக்கவும் மாநில உயர்கல்விச் சீரமைப்பு செயற்குழுவை அமைக்க வேண்டும்; ஆசிரியர் நியமனங்களில் வெளிப்படைத்தன்மை, காலக்கெடுவுடன் கூடிய நியமன முறையை அறிமுகம் செய்ய வேண்டும். ஆய்வு, உள்கட்டமைப்பு மேம்பாடு, தொழில்நுட்ப வளர்ச்சிக்கான நிதியை உயர்த்த வேண்டும்.
அவற்றுடன் தற்போதைய சூழலுக்கு ஏற்ற பாடத் திட்டங்களை உருவாக்கும் வகையில், பல்கலைக்கழகங்கள் தொழில் நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் பேராசிரியர் பாலகுருசாமி கூறினார்.

