சென்னை: தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் இருந்து பறவைக் காய்ச்சல் பரவுவதாகத் தகவல்கள் வெளியாகி வருவதால், நாட்டிலேயே அதிக முட்டை உற்பத்தி செய்யும் மையங்களில் ஒன்றான தமிழகத்தின் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோழிப் பண்ணைகளில் நோய் பரவாமல் தடுக்க நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
நாமக்கல் கேரளாவுடன் நேரடி எல்லையைப் பகிர்ந்து கொள்ளவில்லை என்றாலும், இந்தியாவின் கோழிப் பண்ணைத் தொழிலில் மாவட்டத்தின் முக்கியப் பங்கைக் கருத்தில் கொண்டு, அதிகாரிகளும் கோழிப்பண்ணையாளர்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.
நாமக்கல்லில் மட்டும் கிட்டத்தட்ட 1,500 கோழிப்பண்ணைகள் உள்ளன. அங்கிருந்து நாள்தோறும் மில்லியன் கணக்கான முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு இந்தியாவின் பல மாநிலங்களுக்கு விநியோகம் செய்யப்படுகின்றன.
கேரளாவில் தீவிரமாகப் பரவி வரும் பறவைக் காய்ச்சல் நோயைக் கருத்தில் கொண்டு, மாநிலங்களுக்கு இடையேயான எல்லைகளில் தமிழக அரசு கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளது, கோழிப் போக்குவரத்து வாகனங்களின் சோதனைகளை அதிகரித்தது மற்றும் பண்ணைகள் முழுவதும் சுகாதாரக் கண்காணிப்பைக் கடுமையாக்கியுள்ளது. முக்கியமாக, கேரளாவில் இருந்து தமிழகத்திற்குள் நுழையும் வாகனங்கள் கடும் சோதனைகளுக்கு ஆளாவதாகக் கூறப்படுகிறது.
அனைத்து இந்திய கோழி ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் செயலாளர் வல்சன் பரமேஸ்வரன் கூறுகையில், “அபாயங்கள் குறித்து கோழிப் பண்ணை உரிமையாளர்கள் முழு எச்சரிக்கையுடன் உள்ளனர்.
“நாமக்கல்லில் இருந்து தினமும் 50 லட்சத்திற்கும் அதிகமான முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஏற்றுமதி சார்ந்த பண்ணைகள் ஆண்டு முழுவதும் கடுமையான பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றுகின்றன. பண்ணைகளில் உள்ள அனைத்துப் பறவைகளும் 21 நாள்களுக்கு ஒருமுறை பரிசோதிக்கப்படுகின்றன, மேலும் பண்ணைகளில் பயன்படுத்தப்படும் தண்ணீரும் நோய்க்கிருமிகளை அகற்றுவதற்குச் சுத்திகரிக்கப்படுகிறது,” என்று அவர் கூறினார்.

