சென்னை: தமிழக அரசுக்கு இன்று ரூ.10 லட்சம் கோடிக்கும் மேல் கடன் உள்ளது. அரசின் கஜானாவைச் சுத்தமாக துடைத்து வழித்து வைத்துவிட்டுச் சென்றுள்ளார்கள். தூக்க முடியாத அளவு சுமையை ஏற்றி வைத்துவிட்டுச் சென்றுள்ளனர். அந்த நிலையில்தான் இந்தப் பொறுப்பை ஏற்றுள்ளேன். உள்ளே போய்ப் பார்த்தால்தான் என்ன இருக்கிறது, என்ன இல்லை எனத் தெரியும். உள்ளே போய்ப் பார்த்துவிட்டு, தற்போதைய தமிழக அரசு இப்போது என்ன நிலையில் உள்ளது என்பதை ஒரு வெள்ளை அறிக்கையாக வெளியிடுவேன்,” எனத் தமிழக முதல்வர் விஜய் தெரிவித்தார்.
யாரையும் மறைமுகமாக எதிர்கொள்ள மாட்டேன்
நான் யாரையும் மறைமுகமாக, முகத்தை மூடிக்கொண்டு சந்திக்க மாட்டேன். எல்லாவற்றையும் வெளிப்படையாகச் செய்வேன். அதே நேரத்தில் எனது வாக்குறுதிகளை நிறைவேற்ற நீங்கள் எனக்கு கால அவகாசம் கொடுக்க வேண்டும். அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவேன்.
போதைப்பொருள் கலாசாரத்தை ஒழிக்க நடவடிக்கை
பெண்களுக்கான பாதுகாப்பை கண்டிப்பாக உறுதி செய்வேன், போதைப்பொருள் கலாசாரத்தை ஒழிக்க நடவடிக்கை எடுப்பேன், நமது பசங்களைக் காப்பாற்ற வேண்டியது நம் பொறுப்பு. சட்டம் ஒழுங்கை கண்டிப்பாக உறுதி செய்வேன். என்னை அவமானப்படுத்தியவர்களுக்கும், 8 கோடி மக்களுக்கும் பாதுகாப்பு வழங்குவேன்.
நிதிச் சுரண்டல் நடக்காது; நடக்கவிட மாட்டேன்
கல்வி, மருத்துவம், குடிநீர், சாலை, ரேஷன் போன்ற அடிப்படைப் பிரச்சினைகளில் முழு முதல் கவனம் செலுத்துவேன். நான் மக்கள் பணத்திலிருந்து ஒரு ரூபாய் கூட எடுக்க மாட்டேன். எனக்கு அந்த அவசியமும் இல்லை. அதுபோல நான் யாரையும் தப்பு செய்யவும் விட மாட்டேன். எனது அரசில் யாரும் தவறு செய்ய விடமாட்டேன்.
ஒரே அதிகார மையம்தான்
வென்றுவிட்டோம் என ஓர் ஆட்டம் ஆடிப்பார்க்கலாம் என்ற எண்ணமிருந்தால், அதனை உடனே மறந்துவிடுங்கள். என் அரசில் ஒரே அதிகார மையம்தான், அது நான் தான். பல அதிகார மையங்கள் இங்கே கிடையாது. பெண்கள், விவசாயிகள் உட்பட அனைத்து மக்களும் நம் அரசில் நன்றாக இருப்போம். சிறுபான்மையினருக்காக நமது அரசு எப்போதும் துணை நிற்கும். இந்து, முஸ்லிம், கிறித்துவர்களுக்கான முகம் தான் இந்த விஜய்யின் முகம்.
குட்டி நண்பா, நண்பிகளுக்கு நன்றி
முக்கியமாக இந்த விஜய் மாமாவின் குட்டி நண்பா, நண்பிகளுக்கு நன்றி. அவர்களால் தான் இந்த விஷயம் நடந்துள்ளது. அவர்களின் எதிர்காலத்துக்காக திட்டங்களை நிறைவேற்றுவேன். வாருங்கள் அனைவரும் சேர்ந்து ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்குவோம்.

