சென்னை: தாதியர்களின் கோரிக்கைகளுக்கு விரைந்து தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி அளித்துள்ளார்.
பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 5வது நாளாகத் தாதியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தொகுப்பூதியத் தாதியர்கள் அனைவரையும் பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தாதியர்களுடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன், அதிகாரிகள் சென்னை கிண்டி எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “காலிப் பணியிடங்கள் உருவானால் 2 ஆண்டுகள் பணிபுரிந்த தாதியர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
பொங்கலுக்கு முன் பணிமூப்பு அடிப்படையில் முன்னுரிமை வழங்கப்படும். கொரோனா காலத்தில் பணியாற்றிய 724 தாதியர்களுக்குத் தொகுப்பூதியப் பணியிடங்கள் உருவாக்கித் தரப்படும். மேலும், 750 தாதியர்களுக்குப் புதிய பணியிடங்கள் உருவாக்கித் தரப்படும்.
அரசின் சார்பில் பரிசீலிக்கப்பட்டு, தாதியர்களின் பல்வேறு கோரிக்கைகளுக்கு விரைந்து தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.
திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு 3,614 ஒப்பந்தத் தாதியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர். 1,200 தாதியர்கள் 11 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் பணியமர்த்தப்பட்டனர். 169 பேருக்கு உடனடி நிரந்தரப் பணியாணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது,” என்று அவர் கூறினார்.

