ஜூலையிலிருந்து தீவிர அரசியல்: அண்ணாமலை அறிவிப்பு

ஜூலையிலிருந்து தீவிர அரசியல்: அண்ணாமலை அறிவிப்பு

2 mins read
8249993e-cec9-4cda-97e4-ded755e4f969
சமூக ஊடக நேரலை வழியாகத் தமது அடுத்தகட்டத் திட்டங்கள் குறித்துப் பேசினார் திரு அண்ணாமலை. - காணொளிப்படம்

கரூர்: வரும் ஜூலை மாதத்திலிருந்து தங்களது இயக்கத்தின் அரசியல் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த இருப்பதாக ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அண்மையில் பாரதிய ஜனதா கட்சியிலிருந்து விலகிய அக்கட்சியின் முன்னாள் தமிழகத் தலைவர் அண்ணாமலை, சமூக ஊடக நேரலை வழியாக விரிவாகப் பேசினார்.

“பெரியதொரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நம்பிக்கையோடு இந்த இயக்கத்தில் மக்கள் தாங்களாகவே இணைந்து வருகின்றனர். யாருக்கும் நான் அழைப்பு விடுக்கவில்லை; முந்தைய கட்சியில் இருந்தும் யாரையும் அழைக்கவில்லை. ‘ஓடிபி’ மூலமாகவே உறுப்பினர் சேர்க்கை நடைபெறுகிறது.

“இப்போதைக்கு ‘வீ த லீடர்ஸ்’ ஓர் அமைப்பாக மட்டுமே செயல்பட்டு வருகிறது. எங்களது இயக்கம் சரியான பாதையில் சென்றுகொண்டிருக்கிறது. இது முழுமையான அரசியல் கட்சியாக மாறிய பிறகு, அதன் தன்மை மிகவும் தீவிரமாக இருக்கும். அதனை வரும் ஜூலை மாதம் முதல் மக்கள் பார்க்கத்தான் போகிறார்கள்,” என்று அவர் சொன்னார்.

தற்போது 1.8 மில்லியனாக உள்ள தமது இயக்கத்தின் உறுப்பினர் எண்ணிக்கை ஐந்து மில்லியனை எட்டிய பிறகு அது அரசியல் கட்சியாக உருமாறும் என்று அவர் சூசகமாகத் தெரிவித்துள்ளார்.

கிராமப்புற வாழ்க்கையின் சிரமங்களைச் சிறுவயது முதலே தாம் அனுபவித்து வந்துள்ளதாகத் திரு அண்ணாமலை குறிப்பிட்டார்.

“தற்போது கிராமப்புறங்களில் பள்ளிகள் மூடப்பட்டு வருவதால், அங்கிருக்கும் குழந்தைகளுக்குக் கல்வி வாய்ப்பே இல்லாத சூழல் உருவாகிறது. அந்நிலையை மாற்றவே பொதுச்சேவைக்கு வந்தேன்,” என்றார் அவர்.

தமிழகத்தில் விளைச்சலுக்கு உகந்த பல லட்சம் ஏக்கர் நிலங்கள் இருந்தும், வறட்சி போன்ற காரணங்களால் விவசாயம் செய்யப்படுவதில்லை என்றும் அவர் சொன்னார்.

அத்தகைய விவசாயப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும், கரூர் பகுதியில் அழிந்துவரும் முருங்கை விவசாயத்தை மீட்டெடுத்து, ஏறத்தாழ 1,000 முருங்கை விவசாயிகளை ஒருங்கிணைக்கவும் ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பைத் தாம் தொடங்கியதாகவும் திரு அண்ணாமலை குறிப்பிட்டார்.

அவ்வமைப்பின்மூலம் நூற்றுக்கணக்கான முஸ்லிம் பெண்கள் தையல் பயிற்சி பெற்றுள்ளதாக அவர் சொன்னார்.

“எல்லாச் சமயத்தினரையும் சமமாக நடத்தும் நாம், அவர்களுக்குப் பயிற்சிச் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சியில்கூட, எனது நிழற்படத்தால் அந்தச் சகோதரிகளுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்பட்டுவிடக்கூடாது என்ற எண்ணத்திலேயே பங்கேற்கவில்லை,” என்று அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்