தமிழகத்தில் அகழ்வாராய்ச்சியின் மூலம் புதிய வரலாறு எழுதப்படும் என்று நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.
கீழடி பகுதியில் அழகியல் உணர்வோடு அருங்காட்சியகம் அமைத்து, 'கீழடி, தமிழரின் தாய்மடி' என்பதை தமிழக அரசு உலகறியச் செய்துள்ளது என்றும் அதற்காக அரசுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார்.
கீழடியில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சியின்போது நூற்றுக்கணக்கான தொல்பொருள்கள் கிடைத்தன. அவற்றின் மூலம் தமிழ் நாகரிகத்தின் தொன்மை, சிறப்புகள் குறித்து அறிந்துகொள்ள முடிகிறது என்கிறார்கள் ஆய்வாளார்கள். கீழடி தொல்பொருள்களை அனைவரும் கண்டு ரசிக்கவும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தமிழ் நாகரிகம் தொடர்பாக அரிய தகவல்களைத் தெரிந்துகொள்ளவும் ஏதுவாக கீழடியிலேயே அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.
அருங்காட்சியகம் உலகத்தரத்தில் இருப்பதாக அதைப் பார்வையிட்ட பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், நடிகர் சூர்யாவும் தமது குடும்பத்தாருடன் கீழடி அருங்காட்சியகத்தைப் பார்வையிட்டார். இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், "தமிழ் நாகரிகத்தின் தனிச்சிறப்பு என்பதை 'கீழடி' உணர்த்துகிறது," எனக் குறிப்பிட்டுள்ளார்.
"பெருமிதம்! வைகை நாகரிகம். 2,600 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர் வாழ்வியலை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்ப்போம். தமிழரின் வைகை நாகரிகத்திற்கு இது ஒரு தொடக்கமே. அகழ்வாராய்ச்சியின் மூலம் புதிய வரலாறு எழுதப்படும். சிறார்கள் அனைவரும் வருக!" என்று தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார் சூர்யா.
தமிழர்களின் தொல்லியல் வரலாற்றைப் பறைசாற்றும் கீழடி அருங்காட்சியகத்தை சூர்யாவுடன் சேர்ந்து அவரது தந்தையும் நடிகருமான சிவக்குமார், தாயார் லட்சுமி, மனைவி ஜோதிகா, குழந்தைகள் தேவ், தியா ஆகியோரும் பார்வையிட்டனர். பின்னர் அங்குள்ள பதிவேட்டில் அருங்காட்சியம் குறித்த தங்களுடைய கருத்துகளை அவர்கள் பதிவிட்டனர்.