தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தமிழக வெற்றி கழகம்: கட்சி தொடங்கினார் விஜய்!

2 mins read
ab19ed3e-d9d7-462e-ad8e-d53a3be46497
2026 தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் தமது கட்சி போட்டியிடும் என்று அறிவித்துள்ளார் விஜய். - படம்: ஊடகம்

சென்னை: நடிகர் விஜய் ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கியுள்ளார்.

அக்கட்சியைப் பதிவுசெய்வதற்காக நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கப் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் டெல்லியில் உள்ள இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையத்திற்குச் சென்றுள்ளார்.

இந்நிலையில், ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்று பதிவுசெய்யப்பட்டுள்ளதாக ‘எக்ஸ்’ ஊடகத் தளத்தில் நடிகர் விஜய் பதிவிட்டிருக்கிறார்.

“என்னுடைய தாய் தந்தைக்கு அடுத்து எனக்கு பெயர், புகழ் மற்றும் எல்லாமும் கொடுத்த தமிழ்நாட்டு மக்களுக்கும் தமிழ்ச் சமுதாயத்திற்கும் என்னால் முடிந்த வரையில் இன்னும் முழுமையாக உதவ வேண்டும் என்பதே எனது நீண்டகால எண்ணம் மற்றும் விருப்பமாகும்.

“வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றும் மக்கள் விரும்பும் அடிப்படை அரசியல் மாற்றத்திற்கு வழிவகுப்பதுதான் நமது இலக்கு,” என்று விஜய் தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தமது கட்சி போட்டியிடாது என்றும் எந்தக் கட்சிக்கும் ஆதரவு அளிக்க மாட்டோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

“நான் ஏற்கெனவே ஒப்புக்கொண்டுள்ள இன்னொரு திரைப்படம் சார்ந்த கடமைகளை, கட்சிப் பணிகளுக்கு இடையூறு இல்லாத வகையில் முடித்துவிட்டு, முழுமையாக, மக்கள் சேவைக்கான அரசியலில் ஈடுபடவுள்ளேன். அதுவே தமிழ்நாட்டு மக்களுக்கு நான் செய்யும் நன்றிக்கடனாகக் கருதுகிறேன்,” என்றும் விஜய் கூறியுள்ளார்.

அண்மைக்காலமாக விஜய் மக்கள் இயக்கம் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. வழக்கறிஞர் அணி, தகவல் தொழில்நுட்ப அணி, மகளிர் அணி எனப் பல அணிகளையும் ஒருங்கிணைத்து, ஆலோசனை நடத்தி வந்தது.

இதனிடையே, சென்ற மாதம் 26ஆம் தேதி சென்னை பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் பொதுக்குழு இயக்க உறுப்பினர்களுடன் விஜய் திடீர் ஆலோசனையில் ஈடுபட்டார். அக்கூட்டத்தில், அரசியல் கட்சி தொடங்குவது தொடர்பில் உறுதியான முடிவு எடுக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

இந்நிலையில், கட்சியின் பெயரை விஜய் அறிவித்திருப்பது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

குறிப்புச் சொற்கள்