சென்னை: பிரபல தமிழ்த் திரைப்பட நடிகர் விக்ரம், அழிவின் விளிம்பில் உள்ள ‘லார் கிப்பன்’ (Lar Gibbon) என்ற அரிய வகை மனிதக்குரங்கை வளர்ப்பதாக வெளியான தகவல் அவருக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வனத்துறை தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அக்குறிப்பிட்ட விலங்குடன் விக்ரம் விளையாடும் காட்சிகள் அடங்கிய காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து சமூக ஊடகங்களில் விவாதங்கள் எழுந்ததையடுத்து, அந்தக் காணொளியை உடனடியாக அவர் நீக்கிவிட்டார். எனினும், விசாரணை தீவிரமடைந்துள்ளதாகத் தெரிகிறது.
தென்கிழக்காசிய காடுகளைப் பூர்விகமாகக் கொண்ட இந்த லார் கிப்பன் குரங்குகள், அனைத்துலக, இந்திய வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் பாதுகாக்கப்பட்ட அரிய வகை உயிரினமாகும்.
அடர்ந்த மரங்கள் நிறைந்த காடுகளில் வாழ வேண்டிய இத்தகைய உயிரினங்களை வீடுகளிலோ அல்லது பண்ணை வீடுகளிலோ கூண்டில் அடைத்து வளர்ப்பது சட்டவிரோதமானது என இயற்கை ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்நிலையில், சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள தொழிலதிபர் சி.கே. ரங்கநாதனின் பண்ணை வீட்டில் விக்ரமுடன் தொடர்புடைய அந்தக் காணொளி படமாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டதாகக் கூறப்படும் அந்தக் குரங்குக்குட்டி, மணிப்பூர், ஈரோடு வழியாக சென்னைக்குக் கொண்டுவரப்பட்டதாக ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், இந்த அரிய வகைக் குரங்கை வீடுகளில் வளர்ப்பதற்கான முறையான அனுமதிச் சான்றிதழும் உரிமமும் பெறப்பட்டுள்ளனவா என்பது குறித்து அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.


