சென்னை: மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக்கின் மனைவியும் ‘கிரீன் கலாம்’ அமைப்பின் நிறுவனருமான அருட்செல்வி, சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய்யைச் சந்தித்து, மரக்கன்று நடும் திட்டத்துக்கு அரசு ஆதரவு அளிக்குமாறு கோரிக்கை விடுத்தார்.
விவேக்கின் 66வது பிறந்தநாளையொட்டி நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது, ‘கிரீன் கலாம்’ ஒருங்கிணைப்பாளர் நந்துவும் உடனிருந்தார்.
முதல்வராக விஜய் பதவியேற்ற பிறகு, தன் கணவர் விவேக்கின் 66வது பிறந்தநாளில் அவரை மரியாதை நிமித்தமாகச் சந்தித்ததாகவும் 2010ஆம் ஆண்டு விவேக் தொடங்கிய ஒரு கோடி மரக்கன்றுகள் நடும் ‘கிரீன் கலாம்’ திட்டத்துக்கு ஆதரவு கோரியதாகவும் அருட்செல்வி தெரிவித்தார்.
தனது கோரிக்கைக்குத் தமிழக அரசு நிச்சயம் ஆதரவு தரும் என முதல்வர் உறுதியளித்ததுடன், தங்கள் குடும்பம் குறித்தும் அன்புடன் விசாரித்ததாக அவர் கூறினார்.
2021ஆம் ஆண்டு வரையிலான 11 ஆண்டுகளில் விவேக் 37 லட்சம் மரக்கன்றுகளை நட்டுள்ளதாகவும் கடந்த ஐந்து ஆண்டுகளில் 80 ஆயிரம் மரக்கன்றுகளை மட்டுமே நட முடிந்ததாகவும் அருட்செல்வி தெரிவித்தார்.
மரம் நடும் பணிகளில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இத்திட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல முதல்வர் விஜய் வலியுறுத்தியதாகக் கூறினார்.
“தற்போது மருத்துவமனைகள், பள்ளிகள், கல்லூரிகளில் மரக்கன்றுகளை நட்டு வருகிறோம். நடப்பட்ட கன்றுகள் முறையாகப் பராமரிக்கப்படுகின்றன.
“காடுகளை அழித்ததும், நகரங்களில் மரங்களை வெட்டிவிட்டு கட்டடங்கள் கட்டுவதுமே தற்போதைய அதிக வெப்பத்துக்குக் காரணம். கட்டடங்கள் அவசியம் என்றாலும், அவற்றைச் சுற்றி மரங்களை நட்டுச் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க அனைவரின் ஆதரவும் அவசியம்,” என்று அருட்செல்வி தெரிவித்தார்.
