சென்னை: பிரபல நடிகர் புகழின் இரண்டு வயது மகளின் பெயர் உலகச் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளியேறும் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான இவர், பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இவரது மகள் ரிதன்யாவுக்கு இரண்டு வயதாகிறது. அதற்குள் இந்தக் குழந்தை இரண்டு உலகச் சாதனைகளைப் புரிந்துள்ளது.
கடந்த ஆண்டு 2 கிலோ ‘டம்பெல்ஸ்’களை ‘அதிக நேரம் தூக்கிச் சுமந்த குழந்தை’ (17 நொடிகள்) என்பதுதான் ரிதன்யாவின் முதல் சாதனை.
இதையடுத்து, பிறந்த 11 மாதம் 14 நாள்களில் ‘அதிக படிகள் ஏறிய குழந்தை’ (45 படிகள்) என்ற சாதனையும் தன் மகளுக்குச் சொந்தமாகிவிட்டது எனச் சொல்கிறார் நடிகர் புகழ்.
தன் மகளின் சாதனை குறித்த தகவல்களை அவர் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பகிர்ந்ததை அடுத்து, ‘சாதனை குழந்தை’க்குப் பாராட்டுகள் குவிகின்றன.

