சென்னை: தமிழ்த் திரையுலகில் 1990களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை கஸ்தூரி.
இப்போது தமிழ், தெலுங்கு மொழிப் படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். கஸ்தூரி அவ்வப்போது திரைப்படம், அரசியல் தொடர்பான கருத்துகளைக் கூறி பரபரப்பை ஏற்படுத்துவது வழக்கம்.
இந்த நிலையில், அவர் இப்போது அதிகாரபூர்வமாக பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளார். தமிழக பாஜக தலைமை அலுவலகமான சென்னை கமலாயத்தில் நடைபெற்ற விழாவில் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் முன்னிலையில் கஸ்தூரி பாஜகவில் தம்மை இணைத்துக் கொண்டார்.
அவருடன், நடிகையும் சமூக செயற்பாட்டாளருமான திருநங்கை நமிதா மாரிமுத்துவும் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 15) கமலாலயத்தில் தமிழ்நாடு பாஜக கலை,கலாசாரப் பிரிவின் தலைவர் பெப்சி சிவா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.

