மதுரை: தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாகப் பேசிய நடிகை கஸ்தூரிமீது காவல்துறையில் பலரும் புகாரளித்து வருகின்றனர்.
இதனையடுத்து, நடிகை கஸ்தூரி முன்பிணை வழங்கக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு அளித்துள்ளார். அம்மனு செவ்வாய்க்கிழமை (நவம்பர் 12) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனத் தெரிகிறது.
இம்மாதம் 3ஆம் தேதி, பிராமணர்களைப் பாதுகாக்க புதிய சட்டம் இயற்ற வலியுறுத்தி, சென்னையில் இந்து மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தியது. அதில் பங்கேற்ற கஸ்தூரி, தெலுங்கு பேசும் மக்கள் குறித்து இழிவாகப் பேசியதாகச் சொல்லப்படுகிறது.
அவரது பேச்சுக்குத் தெலுங்கு அமைப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும், அவர்மீது காவல் நிலையங்களில் தொடர்ச்சியாகப் புகாரளிக்கப்பட்டும் வருகிறது.
அதனைத் தொடர்ந்து, தனது கருத்துகளைத் திரும்பப் பெற்றுக் கொள்வதாகக் கஸ்தூரி அறிவித்தார்.
இதனிடையே, அகில இந்திய தெலுங்கு சம்மேளன பொதுச் செயலா் நந்தகோபால், எழும்பூா் காவல் நிலையத்தில் கஸ்தூரிமீது புகாரளித்தாா். அதன் தொடர்பில், நான்கு பிரிவுகளின்கீழ் கஸ்தூரிமீது காவல்துறை வழக்கு பதிந்துள்ளது.
காவல்துறையினர் கஸ்தூரியைத் தேடிச் சென்றபோது சென்னையிலுள்ள அவரது வீடு பூட்டியிருநதது என்றும் கைப்பேசி வழியாக அவரைத் தொடர்புகொள்ள முடியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, கஸ்தூரியைத் தனிப்படைக் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

