கூடுதலாக 29,108 காவலர்கள்; தமிழ்நாடு காவல்துறைக்குப் பெரும் உத்வேகம்

கூடுதலாக 29,108 காவலர்கள்; தமிழ்நாடு காவல்துறைக்குப் பெரும் உத்வேகம்

2 mins read
b5415727-959b-463b-a180-e14e9da09725
காவல்துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) டாக்டர் மகேஷ் குமார் அகர்வால். - படம்: த நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்
Google News Preferred Icon

மதுரை: தமிழ்நாட்டின் காவல்துறை, தீயணைப்பு, தடயவியல் துறைகளை நவீனமயமாக்குவதற்காக அந்த மாநிலத்தின் முதலமைச்சர் ஜோசப் விஜய் பல்வேறு அறிவிப்புகளை அண்மையில் வெளியிட்டார்.

முதல்வர் விஜய், காவல்துறையை நவீனமயமாக்கும் திட்டத்திற்காகக் கிட்டத்தட்ட 212 கோடி ரூபாயும், புதிய வாகனங்களைக் கொள்முதல் செய்ய 200 கோடி ரூபாயும் ஒதுக்கினார்.

மாதாந்தர அவசரச் செலவினங்களுக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், சிறப்புப் பிரிவுகளுக்கும் மேம்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீடுகள் வழங்கப்படும் என்று திரு விஜய் சட்டமன்றத்தில் கூறினார். 

முதல்வரின் புதிய அறிவிப்பால் காவல்துறையின் செயல்பாடு மேம்படும் என்று காவல்துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) டாக்டர் மகேஷ் குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் மாநில காவல்துறைக்குக் கூடுதலாக 29,108 காவலர்கள் சேர்க்கப்படுவதும் பெரும் உத்வேகத்தைத் தரும் என்று அவர் குறிப்பிட்டார்.

கூடுதல் காவலர்களால் காவல்துறையின் ஒட்டுமொத்த பலம் அதிகரிப்பதோடு, சிறப்பான காவல் பணிகளையும் எதிர்பார்க்கலாம் என்றும் திரு அகர்வால் கூறினார்.

“ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ள சிங்கப்பெண் சிறப்புப் படை, போதைப்பொருள் தடுப்புப் படை ஆகியவை பெண்கள், குழந்தைகள் மீது தனிக் கவனம் செலுத்துவதுடன், போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தவும் செயல்படும்,” என்று திரு அகர்வால் தெரிவித்தார்.

பொருளியல் குற்றப்பிரிவு போன்ற சிறப்புப் பிரிவுகளின் மோசமான செயல்பாட்டுக்கு உள்கட்டமைப்பு, மனித வளப் பற்றாக்குறை போன்ற பல்வேறு காரணங்கள் இருப்பதாகவும் அவர் கூறினார்.

“காவல்துறை குற்றவாளிகளை அடையாளம் காண்பது, அவர்களின் சொத்துகளைக் கண்டறிவது, அவற்றை முடக்குவது, பறிமுதல் செய்வது உள்ளிட்ட அனைத்து விதமான முயற்சிகளையும் மிகச் சிறப்பாகச் செய்து வருகிறது. மேலும், காவல்துறையின் அனைத்துப் பிரிவுகளுக்கும் சமமான முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது,” என்றார் அவர்.

மதுரை மண்டலத்தில் பலரைப் பாதித்துள்ள மின்னிலக்க நாணய மோசடியைப் பொருளியல் குற்றப்பிரிவுக்குக் கீழ் விசாரித்து வருவதாகவும் திரு அகர்வால் கூறினார்.

குறிப்புச் சொற்கள்
காவல்துறைவிஜய்அரசியல்

தொடர்புடைய செய்திகள்