புதுடெல்லி: கடந்த 2024ஆம் ஆண்டு புயல், வெள்ளம், நிலச்சரிவு உள்ளிட்ட இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்ட ஐந்து மாநிலங்களுக்கு இந்தியாவின் தேசிய பேரிடர் மீட்பு நிதியத்தின் கீழ் கூடுதலாக ரூ.1554.99 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
ஆந்திரம், ஒடிசா, தெலங்கானா, நாகாலாந்து, திரிபுரா, தெலங்கானா மாநிலங்களுக்கு கூடுதலாக ரூ.1554.99 கோடி பேரிடர் நிவாரணம் வழங்கப்படும் என்று அமைச்சர் அமித் ஷா புதன்கிழமை (பிப்ரவரி 19) வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.
மாநில பேரிடர் நிவாரண நிதியின் கீழ் ஏற்கெனவே, ரூ. 8,322.80 கோடி நிதியை 27 மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்கிய நிலையில், இது கூடுதல் நிதியாகும் என்று குறிப்பிட்டார்.
தமிழ்நாட்டில் 2024ல் கடும் சேதங்களை ஏற்படுத்திய ஃபெஞ்சால் புயல் நிவாரணமாக ரூ.37,000 கோடி நிதியை தமிழக அரசு கோரியிருந்த நிலையில், தமிழகத்துக்கு எந்த நிதியும் ஒதுக்கீடு செய்யப்படவில்லை.
இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு ஒதுக்கவில்லை. இந்த முறையும் தமிழகம் மீண்டும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. 2024 நவம்பர் மாதம் 15 மாநிலங்களுக்கு பேரிடர் நிதியாக மொத்தம் ரூ.1,115 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்தது. இதில் தமிழகத்துக்கு ரூ.50 கோடி ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட கேரளத்துக்கும் கூடுதல் நிதி ஒதுக்கப்படவில்லை.
தற்போது 5 மாநிலங்களுக்கு வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள ரூ.1554.99 கோடியில், ஆந்திராவிற்கு ரூ.608.08 கோடியும், நாகாலாந்திற்கு ரூ.170.99 கோடியும், ஒடிசாவிற்கு ரூ.255.24 கோடியும், தெலங்கானாவிற்கு ரூ.231.75 கோடியும், திரிபுராவுக்கு ரூ.288.93 கோடியும் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் ஃபெஞ்சால் புயலால் பாதிக்கப்பட்ட 18 மாவட்டங்களின் விவசாயிகளுக்கு ரூ.498.8 கோடி நிவாரண நிதி வழங்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிப்ரவரி 18ஆம் தேதி உத்தரவிட்டார். இதன்மூலம் 518,783 விவசாயிகள் பயன்பெறுவர். இந்த நிவாரணத் தொகை நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ஓரிரு நாட்களில் வரவு வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.