சென்னை: தமிழகத்தில் புதிய முதலீடுகளின் உதவியோடு மேலும் பல புதிய தொழில் நிறுவனங்கள் தொடங்கப்படும் என தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா தெரிவித்துள்ளார்.
‘சர்வோம் ஏஐ’ நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளதாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் குறிப்பிட்டார்.
ரூ.10,000 கோடி முதலீட்டில் 1,000 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கும் வகையில் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டுள்ளது என்றார் அவர்.
உலகமே செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தை நோக்கி செல்கிறது என்றும் புதிய ஓப்பந்தம் மூலம் செயற்கை நுண்ணறிவு பூங்கா அல்லது சிறிய கிராமம் போன்ற அமைப்பு உருவாகும் என்றும் திரு.ராஜா தெரிவித்தார்.
ஏஐ பூங்கா மூலம் உயர் தொழில்நுட்ப தரவு மையங்கள் அமையும் என்றும் தமிழக அரசின் தரவு மையத்தில் அரசுத் துறைகளின் எல்லாத் தரவுகளும் இடம் பெற்று இருக்கும் என்றும் அமைச்சர் கூறினார்.
புதிய தரவு மையத்தை அமைக்க சென்னை ஐஐடி க்கு அருகே நிலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.
ரூ.10,000 கோடி முதலீட்டில் பெரும்பகுதி தரவு மைய ஆராய்ச்சிக்காக செலவழிக்கப்படும் என்றார் அமைச்சர் ராஜா.
ஏஐ துறையில் தமிழகம் முன்னோடியாக உள்ளதாக குறிப்பிட்ட அவர், புதிய முதலீட்டின் மூலம் தமிழகத்தில் ஏஐ தொழில்நுட்ப துறையில் மிகப்பெரிய வளர்ச்சி உண்டாகும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

